Mon. Oct 7th, 2024
Spread the love

மது போதை அடிமையால் தன் கணவரை இழந்த ஈஸ்வரி ராவ், தன் மகன் ஜெயகிருஷ்ணாவை ஒழுக்கத்துடன் வளர்க்கிறார். சென்னையில் உள்ள பெரிய கல்லூரிக்கு படிக்க செல்லும் ஜெயகிருஷ்ணா, படிப்பு முடிந்தவுடன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்று தாய் ஈஸ்வரி ராவ் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்.

கல்லூரியில் அறிவுடன் மற்றும் ஒழுக்கத்துடன் இருக்கும் ஜெய கிருஷ்ணா மீது பணக்காரப் பெண் நாயகி சாந்தினி காதல் வயப்படுகிறார். சாந்தினியின் காதலை ஜெயகிருஷ்ணாவும் ஏற்றுக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அதன் பின் சில விஷமிகளால் நாயகன் ஜெயகிருஷ்ணா மது போதைக்கு அடிமை ஆகிறார். அதன் பின் இவரது வாழ்க்கையில் பல பிரச்சனைகளும் கஷ்டங்களும் ஏற்படுகிறது.

இறுதியில் மது போதையில் இருந்து ஜெயகிருஷ்ணா விடுபட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கல்லூரி மாணவராக வெள்ளந்தியான சிரிப்போடு இயல்பாக நடித்து இருக்கிறார் ஜெய கிருஷ்ணா. இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்களில் செயற்கைத்தனமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி, முதல் பாதியில் கல்லூரி மாணவியாகவும் இரண்டாம் பாதியில் மனைவியாகவும் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். மாணவியாக கலகலப்பாகவும், மனைவியாக சோகம், ஏக்கம் என்றும் நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ்வின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். தீபா சங்கர், தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் ஆகியோரின் நடிப்பு திரைக்கதையோட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

நாயகன், இயக்குனர், தயாரிப்பாளர் என்று மூன்று பணிகளை செய்து இருக்கிறார் ஜெய கிருஷ்ணா. குடியால் ஒருவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார். தேவை இல்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்து உள்ளது. திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். சத்தியராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *