ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இருட்டி பாளையம் கிராமத்திலுள்ள மக்கள் காட்டு யானைகளால் உயிரிழப்புகளையும் பொருள் இழப்புகளையும் சந்திக்கிறார்கள். மறுபுறம், அதே கிராமத்தில் சிறு சிறு திருட்டுகளைச் செய்து, கெம்பராஜும் (ஜி.வி,பிரகாஷ் குமார்) சூரியும் (KPY தீனா) பெற்றோர் அற்ற அனாதையாக வாழ்ந்து வருகிறார்கள். வனக்காவலர் பணியில் சேர முயன்றுகொண்டிருக்கும் கெம்பா, முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவைத் தத்தெடுத்து, தன் வீட்டிற்குக் கூட்டி வருகிறார்.
இத்தனை வறுமையிலும் தாத்தாவைத் தத்தெடுக்கக் காரணம் என்ன? காட்டு யானைகளால் இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கம் குறைந்ததா? தன் ஆசைப்படி வனக்காவலர் பணியில் கெம்பா சேர்ந்தாரா? போன்ற கேள்விகளுக்கான பதிலைத் தான் படத்தின் மீதிக் கதை.
இப்படத்தின் கதைக்கரு என்ன, திரைக்கதை எதை நோக்கி நகர்கிறது, எப்போது இந்தப் பின்கதை முடியும் என அடுக்கடுக்கான கேள்விகள் அலுப்பையே தருகின்றன. ஆங்காங்கே க்ளிக் ஆகியிருக்கும் தீனாவின் காமெடிகளும், ஊர்க்காரர்களின் சேட்டைகளும் மட்டுமே ஆறுதல் தர, இடைவேளையில் பயங்கரமான ட்விஸ்ட்டைத் தருகிறது படம். அதோடு ஒருவழியாகக் கதை என்ற பொக்கிஷத்தையும் கண்டடைகிறது. இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் திரைக்கதையால் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பி.வி.சங்கர்.
வீடுகளுக்குள் புகுந்து திருடுவது, காதலி பின்னால் சுற்றுவது, நண்பனுடன் சேர்ந்து கிராமத்தினரைக் கலாய்ப்பது என ஜாலியான இளைஞனாக ஒருபுறம் தோன்றும் ஜி.வி.பிரகாஷ். மறுபுறம், சென்டிமென்ட், வஞ்சகம், குற்றவுணர்வு என அதே கதாபாத்திரத்தின் மற்ற பரிமாணங்களை முடிந்தளவு கரைசேர்க்கப் போராடியிருக்கிறார். KPY தீனாவின் காமெடிகளில் பாதி காமெடிகளே க்ளிக் ஆகியிருக்கின்றன. அதேநேரம், தொய்வான பல இடங்களில் தன் காமெடிகளால் ஓரளவிற்கு ஆறுதல் தருவது இவர் மட்டுமே! அதே சமயம் காமெடி என்ற பெயரில் வரும் சில உருவக்கேலிகளைத் தவிர்த்திருக்கலாம்.
இரண்டாம் பாதியில் கதாநாயகனைப் போலக் கலக்கும் பாரதிராஜா, தன் அனுபவ நடிப்பால் வலுசேர்த்திருக்கிறார். சேட்டை, நக்கல் என ஒருபக்கம் நம்மை ரசிக்க வைத்ததோடு, தன் உணர்வுபூர்வமான நடிப்பாலும் உடல்மொழியாலும், அந்தரத்தில் தொங்கியிருக்க வேண்டிய கதாபாத்திரத்தைத் தாங்கி நிறுத்தியிருக்கிறார். தொடக்கத்தில் சுவாரஸ்யமாக அறிமுகமான கெம்பராஜின் காதலியான இவானா கதாபாத்திரம், சிறிது நேரத்திலேயே சம்பிரதாய நாயகியாக மாறிவிடுகிறது. ஆனால் கொடுக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.