Sun. Oct 6th, 2024
Spread the love

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் ஆகி பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் இருக்கின்றனர் ஒரு தம்பதி. ஊரும், பெண்ணின் மாமியாரும் இதை சுட்டிக்காட்ட அப்பெண் தனது கணவனை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைக்கிறார். கணவனோ வர மறுக்கிறார். நீண்ட வற்புறுத்தலுக்கு பின் மதுரையில் உள்ள ஒரு ஹாஸ்பிடலுக்கு பரிசோதனைக்கு வருகிறார்.

பரிசோதனையின் முடிவில் கணவனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிந்து கொள்கிறார். நவீன மருத்துவத்தின் உதவியால் கணவனுக்கு தெரியாமல் கர்ப்பமாகி குழந்தை பெற்று கொள்கிறார் அந்தப் பெண். குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்து இந்த உண்மை கணவனுக்கு தெரியவரும்போது தம்பதிகளுக்குள் மிகப்பெரிய பிரச்னை பூதாகரமாக வெடிக்கிறது.

இப்படி ஒரு சென்சிட்டிவான கருத்தை எடுத்து சரியான நடிகர்களை தேர்வு செய்து படத்தை எடுத்ததற்காக பாராட்டலாம். குழந்தை இல்லாத பிரச்னை என்ற ஒரு விஷயத்தை மையப்படுத்தியே படம் நகர்கிறது. எங்கேயும் ஒரு தேவையற்ற காட்சிகள் கூட படத்தில் இல்லை. இவ்வளவு அறிவியல் வளர்ந்த பின்பும் குழந்தை இல்லாத பிரச்னைக்கு பெண் மட்டுமே காரணம் என்று நம்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் கிராமத்தில் அதிகம் என்று எந்தவித சமரசமும் இல்லாமல் சொல்கிறார் இயக்குநர்.

மலடி என்ற வார்த்தையே பெண்மையை அவமதிக்கும் சொல் என்பதை மறந்து விடுகிறோம். குழந்தையின்மை விஷயத்தில் ஆணாதிக்கம் எவ்வாறு நுழைகிறது என்பதும் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் படத்தில் டீடைலிங் என்ற விஷயம் சில இடங்களில் குறைவாக உள்ளது. ரசிகர்கள் புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள் என்று இயக்குநர் அப்படியே விட்டு விட்டார் போல. சங்கர் ரங்கராஜன் இசையில் பாடல்கள் கிராமத்தை கண் முன் காட்டுகிறது.

“நான் மலடியா?” என்று கத்தி அழும் காட்சியில் இஸ்மாத் பானு நடிக்கும்போது, ‘என்னமா நடிக்குது இந்தப் பொண்ணு’ என்று சொல்லத் தோன்றுகிறது. நம் வீட்டில் பார்க்கும் பெண்ணை கண் முன் கொண்டு வந்து விடுகிறார் பானு.

த்ரவ் முதல் படமே என்று தெரியாத அளவிற்கு ஒரு ஆணாதிக்கம் கொண்ட கணவனாகவும், ஒரு தாழ்வு மனப்பான்மை கொண்ட மனிதனாகவும் நல்ல நடிப்பை தந்துள்ளார். என் உயிர் தோழன் ரமாவின் நடிப்பை பார்க்கும்போது, ‘போதும் இந்தப் பெண்ணை டார்ச்சர் பண்றதை நிறுத்துங்கள்’ என்று நாமே சொல்லும் அளவுக்கு உள்ளது.

தம்பதிகளுக்குள் இருக்க வேண்டியது அன்பு மட்டுமே. அன்பின் ஒரு வெளிப்பாடுதான் குழந்தை என்பதை டைரக்டர் ஆணித்தரமாக சொல்கிறார். மருத்துவம் எல்லாம் உடலுக்கு மட்டும்தான் உள்ளத்திற்கு அன்பு மட்டும்தான் மருந்து என்கிறது இப்படம். இந்த மருந்து கணவன் மனைவிக்குள் அதிகம் இருக்க வேண்டும் என உணர வைக்கிறது, ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படம். வெப்பம் என்றால் ஆண், குளிர் என்றால் பெண், மழை என்றால் குழந்தை என உருவகப்படுத்துகிறார் இயக்குநர். புதிதாக திருமணமானவர்களும், திருமணம் ஆனபின் குழந்தை செல்வத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம், ‘வெப்பம் குளிர் மழை.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *