காட்டுயிர் ஒளிப்படக் கலைஞரான வெண்பா சுப்பையா (ஆண்ட்ரியா) விலங்குகளை புகைப்படம் எடுப்பதற்காக கடுகுபாறை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளார். அதே கடுகுபாறை வனப்பகுதியில் இருக்கும் வனக்காவல் நிலையத்தில் புதிதாய் பணியில் சேருகிறார் மதி என்ற பயந்த சுபாவி. அவரது தந்தை இறந்து விட்டதால் தந்தையின் வேலை இவருக்கு கிடைக்கிறது, அரசியல் பேசி வில்லங்கத்தை உண்டாக்கும் ஓர் இளம்பெண்ணை அதே வனப்பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்கிறார் விக்டர் மகாதேவன் (சலிம் கவுஸ்). யாரையும் கொலை செய்ய துணியும் விக்டர் மகாதேவனிடம் பயந்த சுபாவியான மதி சிக்கிக்கொள்கிறார். அங்கு ஏதோ தவறுகள் நடக்கிறது என்பதை உணரும் வெண்பா சுப்பையா எதிரியை வீழ்த்தி மதியை மீட்டாரா? யார் அந்த விக்டர் மகாதேவன்? ஏன் அவர் எல்லோரையும் கொலை செய்கிறார்? இப்படி பல கேள்விகளுக்கான விடைதான் படத்தின் மீதிக் கதை.
முதல் பாதியில் காட்டைச் சுற்றிக் காட்டுபவராக நடந்து கொண்டே உள்ளார் ஆண்ட்ரியா . இரண்டாம் பாதியில் ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார். அவரது கதாப்பாத்திரம் படைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் என்ன என்பதை சரிவர சொல்லப்படாததால் சுவாரசியம் இல்லாமல் தனியே பயனிக்கிறது கதை.
விக்டர் மகாதேவனாக சலிம் கவுஸ் நடித்துள்ளார். யாராக இருந்தாலும் கொன்று விடுகிறார். “எங்கும் நிறைந்திருக்கும் மகாதேவனாகிய நான், பசியிலிருந்து, வலியிலிருந்து, வாழ்க்கையிலிருந்து விடுதலை தருவேன்” என ஏதாவது நீளமாகப் பேசிவிட்டே கொலை செய்கிறார். சலிம் கவுஸின் கதாபாத்திரம் அழுத்தமாகச் சித்தரிக்கப்படாதது திரைக்கதையின் பலவீனத்தைக் காட்டுகிறது.
வெட்டப்பட்ட மரத்திற்குள் ஆண்ட்ரியா ஓய்வெடுப்பது போல் அமைந்த செட் வொர்க் அருமை, கலை இயக்குநர் பழனிவேலின் செட் நன்றாக உள்ளது. சுந்தர் சி.பாபுவின் இசையும், காடுகளையும் மலைகளையும் அழகான விஷுவல்களாகப் படம்பிடித்துள்ளது. அறிவழகனின் ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது. படத்தொகுப்பாளர் எலிஸா மிகவும் சிரமப்பட்டுப் படத்தை ஓர் ஒழுங்கிற்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளது பாராட்டத்தக்க முயற்சியே.
படத்தில் ஒரு போதாமை நிலவுகிறது. அழுத்தமான கதையற்ற களத்தில், கதாபாத்திரங்கள் கையில் துப்பாக்கியையோ, கத்தியையோ இறுகப் பற்றிக் கொண்டு யாரையாவது தேடியவண்ணமே உள்ளனர். சலிம் கவுஸும், ஆண்ட்ரியாவும் முடிந்தவரை க்ளைமேக்ஸ் வரை போராடி உள்ளனர். எனினும் இயக்குநர் நாஞ்சிலால் கா எனும் காட்டுக்குள் பார்வையாளரை இழுத்துக் கொள்ள முடியவில்லை.