வடக்குபட்டி என்ற ஊரில் 1974ல் நடக்கும் கதை. அந்த கிராமத்தைச் சேர்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாத ராமசாமி (சந்தானம்), அவருக்குச் சொந்தமான நிலத்தில் கோயில் ஒன்றை கட்டி, மக்களின் கடவுள் நம்பிக்கையை தனக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிக்கிறார். அதே ஊரிலுள்ள மூக்கையனும் (ஜான் விஜய்), காளையனும் (ரவிமரியா) எப்போதும் சண்டைக்கோழிகளாக இருக்கும் பெரியதலைகள். அந்தப் பகுதிக்கு புதிதாக வரும் தாசில்தார் (தமிழ்), கோயிலுக்கு தானமாக கிடைத்த நிலத்தை ஏலத்துக்கு விட்டு நிறைய சம்பாதிக்கலாம் என ஐடியா தருகிறார். அதற்காக அதிக கமிஷன் வேண்டும் எனக் கேட்கிறார். அதற்கு சந்தானம் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் ஊரில் ஒரு பிரச்சனை வர, அதைக் காரணமாக வைத்து கோயிலை மூடி சீல் வைக்கும் அளவிற்குக் கொண்டு செல்கிறார் தாசில்தார்.
அந்த சமயத்தில் ‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோய் சென்னையில் பரவுவதை அறிந்த ராமசாமி, கோயில் பூசாரியை அழைத்துக் கொண்டு போய் அந்த நோயை பூசாரிக்கு வரவைக்கிறார். பின் ஊருக்கு வந்து அந்த பூசாரி மூலம் ஊர் மக்களுக்கும் பரப்புகிறார். ‘மெட்ராஸ் ஐ’ நோய் பற்றி தெரியாத அப்பாவி ஊர் மக்களிடம், அது ‘கண்ணாத்தா’ கண்ணைக் குத்தி தண்டனை தந்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறார். அதை வைத்து மீண்டும் கோயிலைத் திறக்க முடிவு செய்கிறார். அவர் நினைத்தபடி கோயிலைத் திறந்தாரா?, தாசில்தார் கோயிலைத் திறக்கவிட்டாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. .
முழம் முழமாய் காதில் பூ சுற்றி, ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருகிறார், இயக்குனர் கார்த்திக் யோகி. கண்ணிவெடி, மெட்ராஸ் ஐ தொடர்பான சில காட்சிகள் மட்டுமே சிரிக்க வைக்கிறது. .
சந்தானம் வழக்கம்போல் டைமிங் காமெடியில் கலகலக்க வைக்கிறார். படத்தின் கதாநாயகியான மேகா ஆகாஷுக்கு அதிக வேலையில்லை. ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். ஒரு கட்டத்தில் சந்தானத்திற்கு அட்வைஸ் செய்து அவரைத் திருத்துவது, சோதனையின் உச்சம். சந்தானத்தின் நண்பராக வரும் முருகேசனின் (மாறன்) டபுள் மீனிங் காமெடிக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது. ஊரின் இரண்டு பெரிய மனிதர்களாக எதிரும் புதிருமாக இருக்கும் ஜான் விஜய், ரவி மரியா இருவரும் ‘மொக்கை’ ஜோக்குகளை அடிக்கடி கொடுத்து சோதிக்கிறார்கள். .
பார்வையற்ற எம்.எஸ்.பாஸ்கர் கவனிக்கவைக்கிறார், பூசாரியாக வரும் சேஷு, அடியாள் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் பங்கிற்கு சிரிக்க வைத்துள்ளனர். ஷான் ரோல்டனின் பின்னணி இசையும், தீபக்கின் ஒளிப்பதிவும் படத்தின் கதையோட்டத்துக்கு என்ன தேவையோ அதை மிகச் சரியாக கொடுத்து இருப்பது மன ஆறுதல். மொத்தத்தில் ‘கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவதும், கடவுள் நம்பிக்கையை விமர்சிப்பதும் தவறு’ என்ற மெசேஜ் சொல்ல முயல்கிறது படம்.