Fri. Oct 4th, 2024
Spread the love

2K கிட்ஸ்களின் வாழ்க்கையும், அவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்னைகளும்தான் படத்தின் கதை. ‘ஏ’ சர்ட்டிபிகேட் என்பதாலோ என்னவோ காட்சிகளும், வசனங்களும் பகீரென்று தெளிக்கிறது. நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகிய மூவரும் கல்லூரி மாணவிகள், இவர்கள் சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள். இவர்களை போலவே இவர்களது பெற்றோர்களும் நண்பர்கள்தான். நயன் கரிஷ்மா மீது அம்மா சுரேகா வாணி அதிக நம்பிக்கை வைத்து, அவரை டாக்டராக்க முயற்சிக்கிறார். அவரது கணவர், ராணுவ மேஜராக இருந்து மறைந்தவர். அம்ரிதா ஹால்டர் மீது தந்தை ஸ்ரீமன் அபார நம்பிக்கை வைத்து, தனது மகளை அவ்வப்போது கொஞ்சுபவர். அடுத்து மஞ்சீரா மீது அதிக பாசம் கொண்ட தந்தை ராஜகோபால், தன்னைப்போல் அவரை கவர்மெண்ட் வேலையில் அமர்த்த ஆசைப்படுகிறார்.

தங்கள் மகள்களின் எதிர்காலம் குறித்து, பெற்றோர்கள் இவ்வளவு ஆழமாக கனவுகாணும் நிலையில், அந்த மகள்களோ வாலிப வயதுக்கு வந்துவிட்டதால், இனி தங்கள் எதிர்கால வாழ்க்கையை தாங்களே வடிவமைப்போம் என்று சபதம் செய்து, ஆளுக்கு ஒரு ஆண் நண்பனை தேர்வு செய்து, பார்ட்டிக்கு கூட்டிச் செல்கின்றனர். ‘தோழிக்கு திருமணம்’ என்று பெற்றோர்களிடம் பொய் சொல்லி பார்ட்டிக்குச் செல்லும் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர், உடல்ரீதியாக தனது ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருக்க முடிவு செய்கின்றனர். இதனால் முன்னேற்பாடாக மெடிக்கல் ஷாப்பில் ‘காண்டம்’ வாங்கி அதிர வைக்கின்றனர். மகள்கள் பார்ட்டிக்குச் சென்றிருக்கும் விஷயம் தெரிந்து பதறும் பெற்றோர்கள், அவர்களை கண்டுபிடிக்கச் செல்லும்போது, கடற்கரை விடுதி ஒன்றில் ரெய்டு வந்த போலீஸ் சம்பத் ராமிடம் சிக்குகின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.

புகை, மது, தவறான விஷயங்களைப் போதிக்கும் சமூக வலைத்தளங்கள் என்று, இளம் தலைமுறையினரின் வாழ்க்கை எவ்வாறு சீரழிகிறது என்பதை அக்கறையுடன் சொல்ல முயன்றுள்ளார் இயக்குனர் எம்.முத்து. படிக்கும் வயதில் காதல் என்பதையும் தாண்டி உடல் ரீதியிலான உறவு என்பதையும் கேள்விப்படுகிறோம். அப்படியான சிலரைப் பற்றிய விஷயங்களை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அப்படியான காட்சிகள்தான் இந்தப் படத்தில் நெருடலாக இருக்கின்றன. ஆனால், அவற்றைக் காட்டினால் மட்டுமே இந்தப் படத்தில் இயக்குனர் சொல்ல நினைக்கும் விஷயமும் புரியும். தலைமுறை இடைவெளி மற்றும் கலாச்சார மாற்றங்களைப் பற்றி இனிப்பு தடவிய மருந்தாகச் சொல்லியிருக்கிறார். மூன்று இளம் பெண்களின் கேரக்டர்களை வடிவமைத்ததில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். அவர்களுக்குள்ளான போட்டியை சற்று வேறு விதத்திலும் காட்டியிருக்கலாம், அது படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கும். 

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் மத்தியில் கிளாமரிலும், நடிப்பிலும் நிலவும் போட்டி அபாரம். பெற்றோர்களாக வரும் சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் ஆகியோர் நிறைவாக நடித்துள்ளனர். அம்ரிதா ஹால்டர் லெஸ்பியன் என்றதும் அதிர்ச்சி அடையும் ஸ்ரீமன், மகளின் கவுரவத்துக்காக ஆதரவுக்கரம் நீட்டும் இடத்தில் சபாஷ் சொல்ல வைக்கிறார். நயன் கரிஷ்மா நண்பராக சாத்விக் வர்மா, அம்ரிதா ஹால்டர் நண்பராக ஜாக் ராபின்சன், மஞ்சீரா நண்பராக ரசீம் நடித்துள்ளனர். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலு இசையும் படத்தின் தேவையை உணர்ந்து உதவியுள்ளன. கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று முன்பே தெரிந்துவிடுவது சற்று பலவீனம் என்றாலும் சொல்ல வந்ததை துணிந்து சொல்லி நிறைவாக்கியுள்ளார். சபாஷ் இயக்குனரே!

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *