Sun. Oct 6th, 2024
Spread the love

கன்னியாகுமரிப் பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டரான கதாநாயகன் (விஜய் விஷ்வா) அருணும் மீன் பிடி தொழில் செய்பவரான ஜோசப்பும் (நலீப் ஜியா) நெருங்கிய நண்பர்கள். பெற்றோர்கள் யாரும் இல்லாத இவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் நட்புடன் வாழ்கிறார்கள்.
ஒரு நாள் நாயகி (மஹானா) தர்ஷினியை நாலைந்து ரவுடிகள் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். அவர் மூச்சு முட்ட ஓடுகிறார். வழியில் கண்ணில் பட்டவர்களிடம் உதவி கேட்கிறார். யாரும் வரவில்லை. பயந்து விலகிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் இதைப் பார்க்கும் அருண் அந்த ரெளடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். அப்போது “என்ன நீ நிஜமாகவே அடிக்கிறாய்?” என்கிறார்கள். பிறகுதான் தெரிகிறது. அது தர்ஷினி நடத்தும் யூடியூப் சேனலுக்காக எடுக்கப்படும் ஒரு பிராங்க் வீடியோ என்று. இதை அறிந்து தர்ஷினியை, அருண் ஓங்கி அறைந்து விடுகிறார் . உன் சேனலை மக்கள் பார்க்க வேண்டும் என்று இப்படி ஏமாற்றலாமா? என்று திட்டுகிறார். ஆனால் அந்த வீடியோ பல லட்சம் பேரால் பார்க்கப்படுகிறது.
விஜய் அருணின் துணிவும் அவரது குணமும் தர்ஷினிக்கு பிடித்து விட, அருண் மீது காதல் கொள்கிறார். அது திருமணம் வரை செல்கிறது. ஆனால் அந்த திருமணத்தில் ஒரு சிக்கல் வருகிறது. நாயகி தர்ஷினிக்குத் திருமண வயது 21 ஆகவேண்டுமென்றால் 7 நாட்கள் மீதம் உள்ளன. அந்த ஏழு நாட்களை எப்படியாவது சமாளித்துத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இருவரையும் சேர்த்து வைக்க நண்பர் ஜோசப் உதவுகிறார். நாயகியின் அண்ணன் துரை (ஜான் விஜய்) அடியாட்களை வைத்துத் துரத்துகிறார். காதலுக்கு உதவிய நண்பனையும் பழி வாங்கத் துடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஜோசப் காணாமல் போகிறார். ஜோசப் எங்கு போனார் ? அருண் காதல் என்னானது? காதலர்களை வெறியோடு துரத்தும் துரை கும்பல் என்ன செய்கிறது? என்பது தான் கும்பாரியின் கதை.

கும்பாரி என்பது நண்பன் என்கிற பொருள் படும் சொல்லாகப் இப்படத்தில் பார்க்கப்படுவதால், நட்புக்கு முக்கியத்துவம் தரும் படம் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு காதல் கதையும் அண்ணன் தங்கை பாசக்கதையும் பின்னி பிணைந்து திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளது.

அருண் பாத்திரத்தில் நடித்துள்ள கதாநாயகன் விஜய் விஷ்வாவும், அவரது நண்பனாக ஜோசப் பாத்திரத்தில் நடித்துள்ள நலீப் ஜியாவும் நன்றாக நடித்துள்ளார்கள். தர்ஷினி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஹானா அளவான அழகுடன் அளவான நடிப்பைக் கொடுத்துள்ளார். நகைச்சுவை நடிகையாக அறியப்பட்ட மதுமிதா ஆர்த்தி கதாபாத்திரத்தில் அவரது உடல் மொழியும் வசன உச்சரிப்பும் மிகை ரகம். குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட மீனாள் இதில் காமெடி என்ற பெயரில் நம்மைச் சோதிக்கிறார்.
ஒரு பரபரப்பான காதல் கதையாக இருக்க வேண்டியதை ஆங்காங்கே அறுவை ஜோக்குகளுடன் அசட்டுத்தனமான காட்சிகளை வைத்து அலுப்பூட்டி விடுகிறார்கள். குறிப்பாக ஜான் விஜய் தனது தங்கையிடம் பாசம் காட்டுவதாக அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் நாடகத்தனமானவை . மிகை நடிப்பின் உச்சமாக உள்ளன. வீரத்துக்கும் வில்லத்தனத்திற்கும் பெயர் பெற்ற பருத்திவீரன் சரவணனை ஒரு காமெடியன் ஆக்கி வெறுப்பேற்றி உள்ளார்கள்.
ஜான்விஜய்யின் அல்லக்கையாக காமெடி நடிகர் சாம்ஸ் வருகிறார்.தன்னால் முடிந்த அளவிற்கு சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். ஒல்லியான குடிகாரன் பாத்திரத்தில் வரும் ராயன் சில இடங்களில் சிரிப்பு மூட்டுகிறார்.
படத்தின் பெரிய பலமாக இருப்பது பிரசாத் ஆறுமுகம் செய்துள்ள ஒளிப்பதிவு என்று கூறலாம். கன்னியாகுமரி மண்ணின் அழகு, அருவி, ஆறு, கடல் என்றும் பச்சைப் பசேல் இயற்கைப் பிரதேசங்களையும் தன் கேமராவுக்குள் சிறைப்படுத்திக் காட்சிப்படுத்தியுள்ளார்.நடுக்கடலில் கதாநாயகனை வில்லனின் படகுகள் சுற்றி வளைப்பதை ட்ரோன் மூலம் படம் ஆக்கிய விதம் நன்றாக உள்ளது.
இசையமைப்பாளர்களும் தங்கள் பங்கைக் குறையின்றிச் செய்துள்ளனர். குமரி மாவட்ட வட்டார வழக்குகளைக் கோர்த்து படத்தின் ஆரம்பத்தில் குமரித் தமிழில் ஒலிக்கும் ‘அவியே இவியே எல்லாரும் நில்லுங்க’ பாடல் கவனிக்க வைக்கிறது. அதைக் காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் பொருத்தம். இரண்டாவது பாதியில் ஒலிக்கும் ‘நானும் நீயும் சேந்திடவே மனம் ஏங்குதே’ பாடல் இனிமை ரகம்.
மொத்தத்தில் நட்பு ,காதல், அண்ணன் தங்கை பாசம் என மூன்றையும் சொல்ல முயன்றுள்ளார்கள். காட்சிப்படுத்தல்களில் பாத்திரச் சித்தரிப்புகளில் ஆழம் இன்னும் இருந்திருக்கலாம். சிறிய பட்ஜெட்டில் அவர்களால் முடிந்ததை கொடுத்துள்ளார்கள். இருந்தும் இப்படம் ஆவரேஜ் படமாகவே பார்க்கப்படுகிறது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *