மதிப்பீடு: ⭐⭐⭐☆☆ (3/5)
ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படமும் லீக், ஏ சான்றிதழ் என பல சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது தமிழக முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத என்டர்டெயினராக இருந்து வந்த விஜய் தனது கடைசித் திரைப்படமாக அறிவித்துவிட்ட இந்தப் படம் பற்றி பார்க்கலாம்.
மதுரை சிறையில் கைதியாக இருக்கும் தளபதி வெற்றிகொண்டானை (விஜய்) அறிமுகப்படுத்துவதோடு கதை தொடங்குகிறது. உயிருக்குப் போராடும் வெற்றிகொண்டானின் தாய் (ரேவதி) தன் மகனைக் கடைசி முறையாகப் பார்க்க விரும்புகிறார்.
சிறைக் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் (கவுதம் வாசுதேவ் மேனன்) விதிமுறைகளை மீறி வெற்றிகொண்டான் தன் தாயைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறார். இதனால் சஸ்பெண்ட் செய்யப்படும் ஸ்ரீகாந்த், ஆகஸ்ட் 15 சுதந்திர தின பொது மன்னிப்பில் வெற்றிகொண்டான் சிறையிலிருந்து விடுதலை ஆகவும் உதவி செய்கிறார்.
விடுதலையான பிறகு, வெற்றிக்கும் ஸ்ரீகாந்தின் மகள் விஜிக்கும் (மமிதா பைஜூ) இடையே ஓர் ஆழமான பந்தம் உருவாகிறது. எதிர்பாராதவிதமாக ஸ்ரீகாந்த் ஒரு விபத்தில் உயிரிழக்க, விஜியின் பாதுகாவலனாக மாறும் பொறுப்பை வெற்றி ஏற்றுக்கொள்கிறார். தன் தந்தையின் ஆசையான ராணுவ அதிகாரி கனவை விஜி எட்ட, அவருக்குத் துணையாக நிற்கிறார் வெற்றி.
இன்னொருபுறம், ஆப்பிரிக்காவில் ஜான் ஹிம்லர் (பாபி தியோல்) என்ற சர்வதேசக் குற்றவாளி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களையும் அரசாங்கத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். எதிர்பாராத சூழலில் வெற்றியின் மகள் விஜி, ஹிம்லரின் சதித்திட்டத்துக்கு குறுக்கே வருகிறார். இது வெற்றிக்கும் ஹிம்லருக்கும் இடையே மோதலுக்கு வழிவகுக்கிறது. வெற்றி தன் தங்கையின் கனவை நிறைவேற்றினாரா, ஹிம்லரின் சதியை முறியடித்தாரா என்பதுதான் ‘ஜனநாயகன்’ படத்தின் மீதிக் கதை.
படம் தொடங்கப்பட்டு சில மாதங்கள் வரை இது தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ ரீமேக் என்பது குறித்து படக்குழு மவுனம் காத்து வந்தது. ஆனால், போகப் போக விஷயம் கசியத் தொடங்கியதும், ‘இது அப்பட்டமான ரீமேக் இல்லை, கதையின் கரு மட்டுமே ரீமேக், மற்றதெல்லாம் ஒரிஜினல்’ என்கிற ரீதியில் படத்தின் இயக்குநர் தொடங்கி படக்குழுவினர் பலரும் கூறிவந்தனர்.
ஆனால், படத்தின் முதல் ஃப்ரேமில் இருந்து கிட்டத்தட்ட இடைவேளை வரை சீன் பை சீன் இது ‘பகவந்த் கேசரி’ ரீமேக் என்பதை அப்பட்டமாக உறுதி செய்கின்றன.
இரண்டாம் பாதியில் மட்டுமே க்ளைமாக்ஸை நெருங்கும் வரை சில காட்சிகளை மாற்றி இருக்கிறார் இயக்குநர். மற்றபடி தெலுங்கில் இருந்த அந்த 100% மசாலா நெடி இங்கும் படம் முழுக்க ஹெவியாக வீசுகிறது.
முதல் காட்சியான அந்த ஜெயில் சண்டையில் தொடங்கும் ஒருவித செயற்கைத்தனம் க்ளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. ஹீரோவின் டயலாக் டெலிவரி, அவரை சுற்றி கொடுக்கப்படும் ‘கேஜிஎஃப்’ டைப் பில்டப், ஒட்டாத காட்சிகள் என செல்லும் திரைக்கதை, இடைவேளையில் தான் சூடுபிடிக்கிறது.
படத்தின் தொடக்கத்தில் ஹீரோவுக்கு கொடுக்கப்படும் ஓவர்டோஸ் ஆன பில்டப்களே திரைக்கதையின் வில்லனாகி விடுகின்றன.
படத்தில் தமிழுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அது எப்படியான மாற்றம் தெரியுமா? ஒரு காட்சியில் வில்லனின் வீட்டுக்கு செல்லும் விஜய், அங்கிருக்கும் எம்ஜிஆர் படம் ஒன்றை கடந்து செல்வார். அப்போது அந்தப் படத்தில் இருக்கும் எம்ஜிஆரின் உருவம், விஜய்யைப் பார்த்து ‘தங்கமே தளபதி’ என்று கூறி சாட்டை ஒன்றை கொடுக்கும். படம் முழுக்க சலிக்க சலிக்க கதைக்கு தொடர்பே இல்லாத மறைமுகமான / நேரடியான அரசியல் வசனங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் ரசிக்கும்படி இருந்தாலும் போகப் போக ஓவர்டோஸ் ஆகிறது.
படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ‘குட் டச் – பேட் டச்’ பற்றிய காட்சியின் நோக்கம் உயர்ந்ததுதான் என்றாலும், அது உணர்வுபூர்வமாக பார்வையாளர்களின் மனதைத் தொடத் தவறுகிறது.
இதற்கு முன்பு ‘பிங்க்’ என்ற இந்திப் படத்தை தமிழுக்கு ஏற்றவாறு அஜித்தை வைத்து ரீமேக் செய்திருந்தார் இயக்குநர் ஹெச்.வினோத். அதிலும் ஏராளமான மாற்றங்களை செய்திருப்பார். அப்படி செய்யவில்லை என்றால், அந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்குமா என்று தெரியாது. ஆனால், இங்கு ஓர் இயக்குநராக அந்த வாய்ப்பை முற்றிலுமாக தவறவிட்டிருக்கிறார் என்று சொல்லலாம்.
விஜயின் திரை ஆளுமை மற்றும் மாஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்கின்றன.அனிருத் இசை மற்றும் பின்னணி இசை பல முக்கிய காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.சில ஆக்ஷன் காட்சிகளும் உணர்ச்சிகரமான தருணங்களும் நன்றாக அமைந்துள்ளன.
திரைக்கதை பல இடங்களில் கணிக்கக்கூடியதாகவும் நீளமாகவும் தோன்றுகிறது. அரசியல் சார்ந்த கருத்துகள் மற்றும் ரசிகர் திருப்தியில் அதிகமாக திளைத்திருக்க செய்துள்ளனர்.
வில்லன் கதாபாத்திரம் மற்றும் சில துணைக் கதைகள் முழுமையாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருக்கும். மாஸ் ஆக்ஷன், அரசியல் பின்னணியுள்ள கதைகள் பிடித்தவர்களுக்கு ஒருமுறை பார்க்கலாம். வலுவான, புதுமையான திரைக்கதை எதிர்பார்ப்பவர்கள் சற்று ஏமாற்றமடையலாம்.
ஜனநாயகன் முழுமையான திரைப்படமாக அனைவரையும் திருப்திப்படுத்தவில்லை என்றாலும், விஜயின் நடிப்பு, மாஸ் தருணங்கள் மற்றும் இசைக்காக ஒருமுறை பார்க்கக்கூடிய படமாக மதிப்பிடலாம்.

