Sat. Oct 17th, 2026
music director deva/thiraiosai.commusic director deva/thiraiosai.com
Spread the love

தென்மேற்குப் பருவக்காற்றின் வீச்சு ஓய்ந்தது…

தென்னிந்திய திரையிசையின் ‘தேனிசை தென்றல்’ தேவாவின் காவியப் பயணம்!

சென்னை: தமிழ் திரையிசையின் வசந்தக்காற்று, எளிய மக்களின் கானாபாடல்களுக்குச் சிம்மாசனம் அமைத்துத் தந்த இசைப் பேரரசர், ‘தேனிசை தென்றல்’ தேவா (75) திடீர் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார். ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் எனத் தலைமுறை கடந்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் திரை வாழ்விலும் அழியாத காவியப் பாடல்களைத் தந்த ஒரு இசைச்சகாப்தம் இதன்மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

அரைநூற்றாண்டு காலத்திரையுலக வரலாற்றில், 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 3,000-க்கும் அதிகமான திரையிசைப் பாடல்கள் மற்றும் 4,000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களைத் தந்து அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தைப் படைத்த ‘தேனிசை தென்றல்’ தேவாவின் பிறப்பு முதல் இறுதிக்காலம் வரையிலான போராட்டமும் சாதனைகளும் நிறைந்த முழுமையான வாழ்க்கைப் பதிவு இது.

மயிலாப்பூர் வரைபடமும் ஓவியக்கனவும்!

தேவா அவர்களின் இயற்பெயர் மாங்காடு சொக்கலிங்கம் தேவநேசன் ஆகும். இவர் சென்னை மயிலாப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்தார். தந்தை சொக்கலிங்கம் அஞ்சல் துறையில் (Postal Department) பணியாற்றினார். தாய் செல்லம்மாள் தீவிர தெய்வ நம்பிக்கை கொண்டவர்.

சிறுவயதில் தேவாவிற்கு இசையைவிடவும் ஓவியக்கலையின் மீதுதான் மிகுந்த ஈர்ப்பு இருந்தது. கொண்டையராஜு, ராமலிங்கம், வி.கே. பரஸ்கர், மணியம் போன்ற புகழ்பெற்ற ஓவியர்களைப் போலதானும் ஒரு பெரிய ஓவியனாக வரவேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. தந்தை வீட்டிற்கு எடுத்து வரும் பொங்கல் வாழ்த்து அட்டைகளைப் பார்த்து வரைவதே தேவாவின் அன்றையப் பொழுதுபோக்காக இருந்தது.

வீட்டில் ரேடியோ வாங்க முடியாத வறுமைச் சூழல் நிலவியதால், பக்கத்து வீட்டில் ஒலிபரப்பாகும் ரேடியோப் பாடல்களைக் கேட்டே தேவாவிற்கு இசைமீது நாட்டம் ஏற்பட்டது. பின்னர், தனராஜ் மாஸ்டரிடம் முறைப்படி பியானோ மற்றும் இசையைக் கற்றுக்கொண்டார்.

Deva music director/thiraiosai.com

14 ஆண்டு காலக் கடும் போராட்டமும் ‘போசஸ் தேவா’ காலமும்!

தன் 18-20 வயதில், நண்பர் சந்திரபோஸுடன் இணைந்து மேடை நாடகங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். சந்திரபோஸ் பெயரையும் தேவநேசன் பெயரையும் இணைத்து‘போசஸ் தேவா’ (Boses Deva) என்ற பெயரில் விசிட்டிங் கார்டு அடித்து, சினிமா வாய்ப்புகளுக்காகக் கோடம்பாக்கத்தில் சைக்கிளிலேயே அலைந்து திரிந்தனர்.

தமிழ்நாட்டின் வரைபடத்திலேயே இல்லாத கிராமங்களுக்கெல்லாம் சென்று நாடகங்களுக்கு இசையமைத்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக சந்திரபோஸுக்கு ‘மதுரகீதம்’ திரைப்படம் மூலம் தனியாக இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூத்த மகனாகக் குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டியிருந்ததால், தூர்தர்ஷன் கேந்திராவில் (Doordarshan) செட்போடும் பணியிலும், நாற்காலிகள் எடுத்துவைக்கும் பணியிலும் தேவநேசன் சேர வேண்டியதாயிற்று. ஒருமுறை பணி நேரத்தில் பியானோ வாசித்ததற்காக 15 நாட்கள் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டது.

தூர்தர்ஷனில் வேலை செய்துகொண்டே, காலை மற்றும் மாலை வேளைகளில் சைக்கிளிலேயே 14 ஆண்டுகள் சினிமா வாய்ப்புகளுக்காகக் கோடம்பாக்கத்தின் தெருக்களில் அலைந்து திரிந்தார். தயாரிப்பாளர் கோவை தம்பியின் அலுவலகத்திற்கு 5 ஆண்டுகள் தொடர்ந்து வாய்ப்புக் கேட்டுச் சென்றதும், ‘மண்ணுக்குள் வைரம்’ படப்பேனரில் ‘தேவேந்திரன்’ என்ற பெயர் வந்த போது அது தனக்கான பெயர் என்று நினைத்து ஏமாந்ததும் தேவாவின் தொடக்ககாலப் போராட்டத்திற்குச் சான்றுகளாகும்.

Deva music director/thiraiosai.com

ஹார்மோனியத்தைச் சுமந்து ஓடிய முதல் வாய்ப்பு!

14 ஆண்டு காலத்தொடர் போராட்டத்திற்குப் பிறகு, 1989-ல் ‘மனசுக்கேத்த மகராசா’ மற்றும் 1990-ல் ‘வைகாசி பிறந்தாச்சு’ திரைப்படங்கள் மூலம் தேவாவிற்கு இசையமைப்பாளர் கதவு திறந்தது.

முதல் படப்பாடல் பதிவுக்காக, காலை 7 மணி ராகு காலத்திற்கு முன் தயாரிப்பாளர் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நிலையில், ஆட்டோ ரிப்பேரானதால் ஹார்மோனியம் மற்றும் தப்லாவைத் தலையில் சுமந்து கொண்டே கோடம்பாக்கத்தில் ஓடிச் சென்று சேர்ந்தார். கவிஞர் வாலி எழுதிய “ஆரம்பம் நல்லா இருக்கு, வயலெல்லாம் நெல்லா இருக்கு” என்ற வரிகள் தேவாவின் திரைப்பயணத்திற்கு நல்வாழ்த்தாக அமைந்தது. ‘வைகாசி பிறந்தாச்சு’ திரைப்படத்தில் ஒரே அமர்வில் (2.5 மணி நேரத்தில்) 7 பாடல்களைக் கம்போஸ் செய்து முத்திரைப் பதித்தார்.

எம்.எஸ். விஸ்வநாதன் தந்த ‘தேனிசை தென்றல்’ பட்டமும் ரஜினி BGM-மும்!

திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நடந்த தேவாவின் 200-வது பக்திப்பாடல் ஆல்பம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் (MSV), தேவாவிற்கு ‘தேனிசைதென்றல்’ என்ற பட்டத்தை வழங்கினார். மேலும் மேடையில் பேசிய MSV, “தேவாவுக்குப் பட்டம் கொடுக்காதீங்க, சினிமாவுல படம் கொடுங்க” என்று உருக்கமாகக் கூறி வாழ்த்தினார்.

அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ படங்களின் மூலம் தேவாவின் இசை புயல் வீசியது. இன்று வரை திரையரங்குகளில் ரஜினி அறிமுகத்தின் போது ஒலிக்கும் ‘சூப்பர்ஸ்டார்’ டைட்டில் BGM தேவாவின் சாகாவரம் பெற்ற படைப்பாகும்.

1996-ஆம் ஆண்டில் மட்டும் ஒரே ஆண்டில் 36 திரைப்படங்களுக்கு இசையமைத்து தென்னிந்தியத் திரையுலகில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார்.

Deva music director/thiraiosai.com

கானா இசையின் பிதாமகனும் அழியாத மெல்லிசைகளும்!

தமிழ் திரையிசையில் எளிய மக்களின் சென்னை கானா பாடல்களுக்கு கௌரவத்தையும் தனித்துவமான ஜானரையும் உருவாக்கித் தந்தவர் தேவா தான்.

‘கானாபாட்டு’ என்ற பெயரையே அவர் தான் முதன் முதலில் உருவாக்கினார். “கவலைப்படாதே சகோதரா”, “ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்”, “சலோமியா”, “வா முனிம்மா வா” போன்ற பாடல்கள் மூலம் மூலை முடுக்கெல்லாம் கானா பாடல்களைக் கொண்டு சேர்த்தார்.

அதே நேரத்தில், ‘ஆசை’ (புல்வெளி புல்வெளி), ‘காதல்கோட்டை’ (நல நலம் அறிய ஆவல்), ‘அவ்வை சண்முகி’, ‘குஷி’ போன்ற திரைப்படங்களில் நெஞ்சை உருக்கும் காலத்தால் அழியாத மெல்லிசைகளையும் வழங்கினார்.

சிங்கப்பூர் அதிபரின் உயில் முதல் ஜென்-ஜிட்ரெண்டிங் வரை!

தேவாவின் இசையமைப்பில் ‘பொற்காலம்’ படத்தில் இடம்பெற்ற “தஞ்சாவூர் மண்ணெடுத்து” பாடல் சிங்கப்பூர் முன்னாள் அதிபர் ஓங்டெங்சியோங்கை மிகவும் கவர்ந்தது.

தான் இறந்த பிறகு இந்தத் தேவகானத்தை ஒலி பரப்பியே தன் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் உயில் எழுதி வைத்த சம்பவம் தேவாவின் இசைக்குக் கிடைத்த சர்வதேச கௌரவமாகும்.

சமீபத்திய ஆண்டுகளில் ‘லியோ’, ‘வாழை’, ‘லவ்வர்’, ‘லப்பர் பந்து’ போன்ற புதிய தலைமுறைத் திரைப்படங்களிலும் தேவாவின் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு, இன்றைய ஜென்-ஜி (Gen-Z) தலைமுறையையும் ஆட்டம் போட வைத்தன.

Deva music director/thiraiosai.com

தேவகானம் என்றும் வாழும்!

மாரடைப்பு காரணமாகத் தேவாவின் உடல் இன்று நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர்தன் ஹார்மோனியக் கட்டைகளில் செதுக்கிச் சென்ற 3,000-க்கும் மேற்பட்ட பாடல்களும், ‘சூப்பர்ஸ்டார்’ BGM-மும், ‘தேனிசை தென்றலாய்’ தமிழ் நெஞ்சங்கள் இருக்கும் வரை என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்!

‘தேனிசை தென்றல்’ தேவாவிற்கு திரைஓசையின் கண்ணீர் அஞ்சலிகள்!

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *