Mon. Oct 7th, 2024
Spread the love

மூத்தகுடி என்கிற ஊரில், பெரிய குடும்பத்து பெண்மணியான மூக்கம்மா (கே.ஆர்.விஜயா) சொல்வதை அந்த ஊரே கேட்கிறது. மூக்கம்மா குடும்பத்தாருடன், சேர்ந்து சிலர் குலசாமி கோவிலில் பூஜை நடத்த செல்கிறார்கள். அப்போது கே.ஆர்.விஜயா மூக்கம்மாவின் மகன், மருமகன் மற்றும் லாரி ஓட்டுநர் சேர்ந்து சாராயம் குடிக்கிறார்கள். அங்கு ஏற்படும் பிரச்சனையால் லாரி விபத்துக்குள்ளாகி அதில் இருந்தவர்கள் உயிரிழந்து விடுகிறார்கள். மூக்கம்மா, அவருடைய தம்பி பழையசோறு (யார் கண்ணன்) மற்றும் அவரது பேரக் குழந்தைகள் மட்டும் அந்த விபத்தில் இருந்து தப்பிக்கிறார்கள். இப்படி ஒரு சோகமான சம்பவத்திற்கு காரணமான மதுவை ஒழித்துக்கட்ட முடிவு செய்யும் மூக்கம்மா, தனது ஊரில் யாரும் மது குடிக்க கூடாது, அப்படி குடித்தால் அவர்கள் ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்படுவார்கள், என்று கட்டளை போடுகிறார். அவருடைய கட்டளை, கட்டுப்பாடு படி மூத்தகுடி மக்கள் மது குடிக்காமல் வாழ்ந்து வருவதோடு, அந்த ஊரில் சாராயம் விற்க விடாமலும் தடுத்து வருகிறார்கள். இதற்கிடையே, தொழிலதிபர் செந்தூரப்பாண்டியன் (ராஜ்கபூர்), மூத்தகுடியில் சாராய தொழிற்சாலை கட்டி, அந்த ஊர் மக்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், மூக்கம்மாவின் பேரக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விடுகிறார்கள். அதில், முறைப்பெண் ஜோதியை (அன்விஷா), வீரய்யனுக்கு (தருண் கோபி) திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே பெரியவர்கள் பேசி வந்ததால், வீரய்யன் ஜோதியை தீவிரமாக காதலித்து வருகிறார். ஆனால், ஜோதிக்கு விரய்யாவின் தம்பி அய்யாதுரை (பிரகாஷ் சந்திரா) மீது காதல் மலர்கிறது. இந்த காதல் பிரச்சனை மூத்தகுடி பெரிய குடும்பத்திற்கு மட்டும் இன்றி, அவர்களால் போடப்பட்ட கட்டுப்பாட்டிற்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் விஸ்வரூபம் எடுக்கிறது. இறுதியில், அந்த களங்கத்தை மூத்தகுடி குடும்பம் எப்படி துடைத்தது?, செந்தூரப்பாண்டியின் சாராய தொழிற்சாலை திட்டம் என்னவானது? என்பதை சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
மது பழக்கத்தினால் மக்கள் எப்படி சீரழிந்து போகிறார்கள் என்பதையும், அப்படிப்பட்ட மதுவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதையும் பேசும் சமூக அக்கறைக்கொண்ட கதையாக இருந்தாலும், அதற்கு ஏற்ற விதத்தில் திரைக்கதை அமையாததால் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது. நாயகனாக நடித்திருக்கும் தருண் கோபி, உணர்ச்சிகரமான நடிப்பை மிக மிக அதிகப்படியாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை பதம் பார்த்து விடுகிறார். அவரது ஓவர் ஆக்டிங்கால் ஏற்படும் தலைவலி மாத்திரைபோட்டாலும் நிற்காது, அந்த அளவுக்கு மனுஷன் ரசிகர்களை தன் நடிப்பால் கொடுமைப்படுத்தி விடுகிறார்,, தருண் கோபியின் தம்பியாக நடித்திருக்கும் பிரகாஷ் சந்திரா எந்த வித உணர்ச்சிகளையும் முகத்தில் காட்ட தெரியாமல் தடுமாறுகிறார். நாயகியாக நடித்திருக்கும் அன்விஷாவின் நடிப்பும் அறைகுறையாகவே இருக்கிறது. கே.ஆர்.விஜயாவின் அனுபவமான நடிப்பு சற்று ஆறுதல் அளித்தாலும், ஆர்.சுந்தரராஜன் – சிங்கம் புலி காமெடி ட்ராக் கடுப்பேற்றுகிறது. யார் கண்ணன் பழைய சோறு வேடம் தேவையற்றது. ராஜ்கபூர் வழக்கமான வேலையை சரியாக செய்திருக்கிறார். கந்தா ரவிசந்திரனின் ஒளிப்பதிவும், ஜே.ஆர்.முருகானந்தத்தின் இசையும் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. சமூகத்திற்கு தேவையான விசயத்தை கதையாக்கி அதனுடன் காதலை சேர்த்து கமர்ஷியல் படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் ரவி பார்கவன், தான் சொல்ல வந்த நல்ல கருத்தை மக்களிடம் கடத்துவதில் தோல்வியடைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *