தேனி மாவட்டத்தில் கேபிள் டி.வி ஆப்ரேட்டராக இருக்கிறார் கதாநாயகன் அமீர். இதனால் இவர் ஊர் மக்களிடம் மிகவும் பரீட்சையமாக இருந்து ஊர் மக்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் உதவிகளை செய்து வருகிறார். அமீரின் நண்பராகிய இமான் அண்ணாச்சி கவுன்சிலர் பதவியில் போட்டியிடுவதற்காக அமீரின் உதவியை நாடுகிறார். இமான் அண்ணாச்சி கவுன்சிலர் பதிவிக்கு நாமினேஷன் கொடுக்கும் பொழுது கதாநாயகியான சாந்தினி ஸ்ரீதரன் எதிர் கட்சிக்கு சார்பாக போட்டியிட வருகிறார். அவரை பார்த்தவுடனே அமீர் காதல் வயப்படுகிறார். அதனால் இமான் அண்ணாச்சிக்கு பதிலாக மக்கள் முன்னணி கட்சி சார்பாக அமீர் போட்டியில் நிற்கிறார். இதனால் சாந்தினி ஸ்ரீதரனிடம் பேசி பழக வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து இதெல்லாம் செய்கிறார். மக்கள் முன்னணி கழகம் சார்பாக அமீர் அந்த தேர்தலில் வென்று சாந்தினியை காதலும் செய்கிறார். பின் சில வருடங்களுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் அதிகாலையில் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரின் மகளான சாந்தினியை காதலிக்கும் எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அமீர் தான் இந்த கொலையை செய்தார் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனை சாந்தினியும் நம்பி அமீரை வெறுக்கிறார். இறுதியாக அமீர் தன் மீதான கொலைப்பழியை நீக்கி சாந்தினியோடு எப்படி சேர்ந்தார் என்பதே இப்படத்தின் மீதிக் கதை.
அமீர் வழக்கம்போல் அவரின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோயின் சாந்தினி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் படத்தில் நடித்துள்ளார். முதல் பாதி காதல் காட்சிகளில் அழகாக நடித்துள்ளார். ஆனால் இரண்டாம் பாதியில் சுத்தமாக நடிப்பு வரவில்லை. இவர்களை தவிர்த்து ஆனந்தராஜ், ராஜ் கபூர், இமான் அண்ணாச்சி ஆகியோர் பேசும் வசனங்கள் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கிறது.
பொலிட்டிக்கல் கதைக்களத்தில் நகைச்சுவை கலந்து படத்தை இயக்கியுள்ளார் ஆதம் பாவா. படத்தை கிட்டதட்ட 5 வருடங்களாக எடுக்கப்பட்டு தற்பொழுது வெளியாகியுள்ளது. இதை மேட்ச் செய்வதற்காக கதையை அதற்கேற்றார் போல மாற்ற முயற்சி செய்துள்ளனர் ஆனால் அது எடுபடவில்லை. அதேபோல் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள். குறிப்பாக வாக்கு எண்ணிக்கை தொடர்பான காட்சிகளெல்லாம் சரியாக விசாரித்து வைத்திருந்திருக்கலாம். வித்யாசாகரின் இசை காட்சிற்கேற்ப அமைந்துள்ளது. பின்னணி இசை கேட்கும் ரகம். ஆதாம் பாவா சார்பில் மூன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் உயிர் தமிழுக்கு திரைப்படத்தை தயாரித்துள்ளது.