2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அதற்கான தலைவராக விஜய் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை வாணி போஜனும் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்துப் பேசிய அவர், “ விஜய்யின் அரசியல் வருகையை நான் மனதார வரவேற்கிறேன். நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது. ‘செங்களம்’ வெப் சீரிஸில் நடிக்கும்போது அரசியலில் இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. எனக்கு இப்போதும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.