லியோ திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Goat). இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, யோகிபாபு, ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, கணேஷ், அஜ்மல் அமீர், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், பிரேம் ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தபடத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, விஜய்யின் 69-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் அதிர்ச்சியிலும், அதே நேரம் மகிழ்ச்சியுடனும் இனிப்பு பகிர்ந்து வருகின்றனர்.