Sun. Oct 6th, 2024
Spread the love

கிறிஸ்துவ குடும்பங்களைச் சேர்ந்த பூர்ணாவுக்கும், விதார்த்துக்கும் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். வசதியான குடும்பத்தை சேர்ந்த வக்கீல் விதார்த். தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் உதவியாளர் சுபஸ்ரீயுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறார். அது எப்படியான தொடர்பு என்றால், தனது முதலிரவு அன்று கூட மனைவி பூர்ணாவுடன் இருக்காமல் நடு இரவில் பாதியில் எழுந்து சுபஸ்ரீ இருக்குமிடம் செல்லுமளவிற்கான கட்டில் தொடர்பு. ஒரு கட்டத்தில் தனது கணவர் விதார்த்தின் தொடர்பு பற்றி அறிந்து அதிர்ச்சியடைகிறார் பூர்ணா. அப்போது அவர் ஓட்டி வரும் காரை திரிகுண் மீது இடித்துவிடுகிறார். அவரை மருத்துமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார். இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டு கொஞ்சம் நெருக்கமாகிறார்கள். பூர்ணா, திரிகுண் கள்ளத் தொடர்பில் இருக்க, விதார்த், சுபஸ்ரீ கள்ளத் தொடர்பில் இருக்க அடுத்து என்ன என்பதுதான் மீதிக் கதை.

கள்ளத்தனமான நான்கு கதாபாத்திரங்கள், அவர்களது வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதுதான் 'டெவில்'. இடைவேளை வரை உணர்வுபூர்வமாக நகரும், பின்னர் த்ரில்லர் கதையாக மாறி, திடீரென திருப்பமடைந்து 'பக்தி' மார்க்கத்தில் முடிவடைவது சற்று அதிர்ச்சியே.

இப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் பூர்ணா, திரிகுண் இடையிலான பழக்கத்திலேயே நகர்கிறது. கார் விபத்தில் சிக்கிக் கொள்பவர்கள் கள்ளக் காதல் விபத்தில் பயணிப்பது ஆச்சரியமே. இருந்தாலும் கட்டிய கணவன் தன்னை ஏமாற்றிய ஆத்திரத்தில் திரிகுண் மீது காதலாகிறார் பூர்ணா. ஏமாற்றம், தவிப்பு, தவிர்க்க முடியாத வரம்பு மீறிய காதல் என உணர்வுபூர்வமாய் நடித்திருக்கிறார் பூர்ணா. படம் முழுவதையும் தாங்கிப்பிடிப்பவர் பூர்ணா தான்.

படம் ஆரம்பித்த நீண்ட நேரத்திற்குப் பிறகே விதார்த் கதாபாத்திரம் வருகிறது. பார்ப்பதற்கு அப்பாவி போல இருப்பவர், முதலிரவன்றே மனைவி பூர்ணாவை விட்டு தனது ஆசை நாயகியான சுபஸ்ரீயைத் தேடிச் செல்பவர். இவரது கதாபாத்திரத்தைப் பார்க்கும் போது, 'கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும்….' என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. மனைவியிடம் மன்னிப்பு கேட்கும் அந்த ஒரு காட்சியில் மட்டும் விதார்த் மனதில் நிற்கிறார்.

திரிகுண், பூர்ணா மீது ஆசைப்படும் இளைஞர். தோற்றமும் நடிப்பும் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய வில்லன் கிடைத்துவிட்டார் எனத் தோன்றுகிறது. ஆனால், கொஞ்சம் ஓவராக நடித்துவிட்டாரோ என்றும் சில இடங்களில் யோசிக்க வைக்கிறது. நடிப்பு மீட்டரைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

விதார்த்தின் ஆசை நாயகியாக சுபஸ்ரீ. மேற்கத்திய பாணியிலான ஆடையில் அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே யார் இவர் எனக் கேட்க வைக்கிறார். சில காட்சிகள்தான் என்றாலும் கதைக்குத் திருப்புமுனையான ஒரு கதாபாத்திரம். மற்ற கதாபாத்திரங்கள் சில வினாடிகள் மட்டுமே வந்து போகிறார்கள். முழு படத்திலும் பூர்ணா, விதார்த், திரிகுண் இவர்கள்தான் ஆக்கிரமித்துள்ளார்கள்.

மிஷ்கின் இப்படத்திற்கு முதல்முறையாக இசையமைத்திருக்கிறார். அவர் விரும்பிய இசையமைப்பாளர்களின் தாக்கம் அவரது இசையில் பளீச் எனத் தெரிகிறது. அப்படியே படத்திலும் அதிசய, அபூர்வ மனிதராய் ஓரிரு காட்சிகள் வந்து போகிறார். லைட்டிங்கிலும், கோணங்களிலும் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு ரசிக்க வைத்துள்ளது.

காதல், கள்ளக் காதல், நேசம், பாசம், பிரிவு, துரோகம் என உணர்வுபூர்வமாய் நகரும் கதை அதே பாதையில் முடியும் என்று நினைத்தால், திடீரென பக்தி, பரவசம், அதிசயம் என முடித்திருக்கிறார்கள். எப்படி முடிப்பது என்று தெரியாமல் இப்படி முடித்துவிட்டார்களோ ?. உணர்வுபூர்வ கதைக்கு இப்படிப்பட்ட முடிவு எதற்கு ?. படம் தடுமாறினால் அதற்கு கிளைமாக்ஸ்தான் காரணமாக இருக்கும்.மொத்தத்தில் டெவில் – துரோகம்!

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *