தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு பைனான்ஸியராகவும், விநியோகஸ்தர் ஆகவும் உள்ள சஞ்சய் லால்வானியின் சமூக பணியை பாராட்டி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
தேசத்தின் முன்னேற்றத்தில் மக்களவையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மக்களவை செயலக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி 96 வது லோக்சபா செயலக தினம், சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நாடாளுமன்ற இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
சமூகத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்கையை மேம்படுத்துவதற்காக, காந்தி மண்டேலா அறக்கட்டளையின் மூலம் எண்ணற்ற பணிகளை மேற்கொண்டதோடு, பின்தங்கிய கிராமப்புற குழந்தைகளின் கல்வி, சுகாதார வசதி மற்றும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரின் நிலையான வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தும் எண்ணற்ற முயற்சிகளில் ஈடுபட்டு, சஞ்சய் லால்வானி முன்னணி வகித்து வருகிறார். குறிப்பாக விளிம்பு நிலை சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில், லால்வானியின் விரிவான பணிகள் அவருக்கு பரவலான பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது.
அந்த விழாவில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா பேசியபோது.. லால்வானியின் குறிப்பிடத்தக்க சமூகப் பணிகளை பாராட்டி பேசியதோடு, அதிர்ஷ்டம் குறைந்தவர்களை உயர்த்த சஞ்சய் லால்வானியின் அர்ப்பணிப்பு, மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலாவின் கொள்கைகளை பிரதிபலிக்கிறது. அப்படிப்பட்ட முன் முயற்சிகளால் எவ்வாறு சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கு லால்வானியின் பணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என பாராட்டி பேசியுள்ளார்.
அதன்பிறகு பேசிய சஞ்சய் லால்வானி, “இந்த மரியாதை எனக்கு மட்டுமல்ல, இந்த முயற்சிகளில் எனக்கு ஆதரவளித்து ஒத்துழைத்த அனைத்து மக்களுக்குமானது. ஒவ்வொரு தனி நபரும், அவர்களின் தகுதியான வாய்புகளை அணுகக்கூடிய சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும்” என்றார்.
96 வது லோக்சபா செயலக தின கொண்டாட்டம், தேசத்தின் வளர்ச்சியில் மக்களவையின் பங்களிப்பை அங்கீகரித்ததோடு, ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தில் பாடுபடும், சஞ்சய் லால்வானியை முன்னிலைப் படுத்தியது, தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளது.