சினிமாவில் நடிகராக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஊரைவிட்டு ஓடி வந்த லால், அதில் சாதிக்க முடியாமல் போட்டோகிராபர் ஆகிறார். பின்னர் தன் மகன் கவினை நடிகன் ஆக்குவதற்காக பெரும் முயற்சிகள் எடுக்கிறார்.சிறு வயது முதலே மகனுக்கு நடிப்பில் ஆர்வம் ஊட்டுகிறார். கவினும் நடிப்பில் ஆர்வம் கொண்டு அதில் தீவிர கவனம் செலுத்துகிறார். ஒரு பக்கம் நாயகி ப்ரீத்தி முகுந்தனை காதலித்து வருகிறார் கவின். இந்நிலையில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும் கவினுக்கு முகத்தில் காயங்கள் ஏற்படுகிறது. காதலியும் கவினை விட்டு பிரிகிறார்.இறுதியில் கவின் நடிகராக மாறினாரா? காதலில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கவின், முதல் பாதியில் சாக்லேட் பாயாகவும், இரண்டாம் பாதியில் சாதிக்க துடிக்கும் இளைஞராகவும் நடித்து மனதில் பதிந்து இருக்கிறார். தாயின் ஆசைக்காக கவின் கல்லூரிக்கு செல்வதும் கல்லூரியில் ரூட்டு தல போல தன் பின்னால் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு ஆரவாரம் செய்வதும் ரசிக்கும் படி உள்ளது. படத்திற்கான ஆடிஷன் சென்று வாய்ப்பு கிடைக்காமல் திரும்பும் போது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.நாயகியாக நடித்து இருக்கும் பிரீத்தி முகுந்தன் கவினின் கல்லூரி காதலியாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். மற்றொரு நாயகியான அதிதி, கவினின் முயற்சிக்கு உறுதுணையாக வந்து மனதில் நிற்கிறார். தந்தையாக நடித்து இருக்கும் லால், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். தாயாக வரும் கீதா கைலாசம், மகனை நினைத்து வருந்துவது, கண்டிப்பது என்று நடிப்பில் பளிச்சிடுகிறார்.
தந்தையின் கனவை நனவாக்க முயற்சிக்கும் மகனை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் இளன். முதல் பாதி ஆட்டம், பாட்டம், காதல் என்று கலகலப்பாகவும், இரண்டாம் பாதி யாரும் எதிர்பார்த்திராத திருப்பம் வைத்தும் திரைக்கதை அமைத்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். தற்போது நடிகனாக முயற்சித்து வரும் இளைஞர்களின் பிரதிபலிப்பாக கவினை காண்பித்திருப்பது சிறப்பு. படத்திற்கு பெரிய பலம் யுவன் சங்கர் ராஜாவின் இசை. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். எழிலரசின் கேமரா 1980 கால கட்டத்திற்கு ஏற்றாற்போல் அழகாக படம் பிடித்து இருக்கிறது. பி.வி.எஸ்.என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.