யூடியூபராக இருக்கும் வசந்த் ரவி சுற்றுசூழல் மீது அதிக ஆர்வமாக இருக்கிறார். இவர் நண்பர்களுடன் சேர்ந்து சூப்பர் ஹியூமன்ஸ் பற்றி வீடியோ பதிவிடுகிறார். அப்போது, தேனி அருகில் லாரி விபத்தில் சிக்க இருக்கும் ஒரு சிறுவன் அறியப்படாத சக்தியால் காப்பாற்றப்படுகிறான். இதைத்தேடி வசந்த் ரவி மற்றும் அவருடைய குழு தேனி செல்கிறது. மற்றொரு பக்கம் பிளாக் சொசைட்டிக்கு தலைவராக இருக்கும் ராஜீவ் மேனன் சமூகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர்களுக்கு சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாதென மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ராஜீவ் மேனன் குழுவினர் உயிரிழக்கின்றனர். இதற்கு காரணம் சூப்பர் ஹியூமன் என்பதை அறிந்து கொள்ளும் ராஜீவ் மேனன், அதை தேடி செல்கிறார். இறுதியில் வசந்த் ரவியும், ராஜீவ் மேனனும் சூப்பர் ஹியூமனை கண்டுபிடித்தார்களா? வசந்த் ரவிக்கும் சூப்பர் ஹியூமனுக்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் வசந்த் ரவி, முதல் பாதியில் சாதுவாகவும், இரண்டாம் பாதியில் அதற்கு நேர்மாறான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படம் முழுக்க ஒரே மாதிரியான முக பாவனைகளை கொடுத்து இருக்கிறார். கதையின் நாயகனான சத்யராஜ் ஆக்ஷன், நடிப்பு, செண்டிமெண்ட் என குறையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ராஜீவ் மேனன் பிளாக் டெவில் உடை மற்றும் தோற்றத்தில் அசத்தி இருக்கிறார். தான்யா ஹோப் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். வெப்பன் படம் சூப்பர் ஹியூமன் கதையை சார்ந்து இருப்பதால் படத்தின் முதல் பாதியில் அடுக்கடுக்கான கதைகள் சொல்லப்படுகிறது. இதனால் கதை எதை நோக்கி செல்கிறதென குழப்பம் வருகிறது. புதுமையான கதையை எடுத்திருக்கும் இயக்குநர் குகன் சென்னியப்பன் இன்னமும் தெளிவாக சொல்லி இருக்கலாம். மில்லியன் ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசை கதைக்கு ஏற்ப கொடுத்திருக்கிறார். பிரபு ராகவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.