ஜெடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கும் பிளாக்மெயில். ஜெடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள ‘பிளாக்மெயில்’ துரோகம், பேராசையில் சிக்கித் தவிக்கும் அதிரடி த்ரில்லிங் கடத்தல் அனுபவம் தரும் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மு.மாறன்.
இதில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்ரீகாந்த், லிங்கா, பிந்து மாதவி, தேஜூ, ரமேஷ் திலக், முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ஷாஜி, ஹரி பிரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழு: இசை : சாம் சி.எஸ்.,ஒளிப்பதிவு : கோகுல் பினாய்,படத்தொகுப்பு : சான் லோகேஷ்,கலை : எஸ்.ஜே. ராம்,ஆடை வடிவமைப்பு : ஆர். திலகப்ரியா சண்முகம் மற்றும் வினோத் சுந்தர், ஸ்டண்ட் மாஸ்டர்: ராஜசேகர்,ஒப்பனை : சசிகுமார் பரசிவம், தயாரிப்பு வடிவம் அமைப்பாளர்: தயாளன் பழனி,தயாரிப்பு நிர்வாகி : ஆர்.இ. ராஜேந்திரன்,எக்ஸிகியூடிவ் புரொடியூசர் : தயாளன் பழனி, மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்.
மருந்துகள் விநியோகஸ்தரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான முத்துக்குமாரிடம் மருந்துகளை டெலிவரி செய்யும் வண்டி ஒட்டுனராக வேலை செய்கிறார் மணி (ஜி.வி. பிரகாஷ்). தனியார் மருந்தகத்தில் வேலை செய்யும் ரேகாவை (தேஜு அஸ்வினி) மணி காதலிக்கிறார். காதலி கர்ப்பமாக இருப்பதையறியும் மணி, கருக்கலைப்பு செய்யாமல் குழந்தைக்காக கூடுதலாக உழைக்க முடிவெடுக்கிறார். இந்த சமயத்தில் முதலாளி முத்துக்குமார் மணியிடம் ஒரு பார்சலை கொடுத்து குறிப்பிட்ட நபரிடம் டெலிவரி செய்யும்படி கூற அதை எடுத்துக் கொண்டு செல்லும் மணி வழியில் மருத்தகத்தில் வேலை செய்யும் காதலியை பார்த்து பேசிவிட்டு வெளியே வர அங்கே சரக்கு வண்டியுடன் டெலிவரிக்கு கொடுக்க இருந்த பொருட்களுடன் காணாமல் போய் விடுகிறது. தன் முதலாளியிடம் நடந்ததை கூற 50 லட்சம் போதைப் பொருள் இருந்த பார்சலை தொலைந்து விட்டதை அறிந்து கோபமாகும் முத்துக்குமார், மணியின் காதலியை கடத்தி வைத்துக் கொண்டு போதைப் பொருள் பார்சலை தேடி கண்டுபிடித்து எடுத்து வரவேண்டும் அல்லது 50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார். தனது உயிர் நண்பர் ரமேஷ் திலக்குடன் பல வகையிலும் பணத்திற்கு முயற்சி செய்யும் மணி பணமும், வண்டியும் கிடைக்காமல் மன உளைச்சலில் இருக்கிறார். அதன் பின் கதைக்களம் தொழில் அதிபர் அசோக் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அர்ச்சனா மற்றும் மகள் அனுவை சுற்றி நகர்கிறது. சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அர்ச்சனாவின் வாழ்க்கையில் அவரது முன்னாள் காதலன் ஏமாற்று பேர்வழி லிங்கா குறுக்கிடுகிறான். பணக்காரியாக இருக்கும் அர்ச்சனாவிடம் காதலிக்கும் போது லிங்காவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ புகைப்படத்தை காட்டி இரண்டு கோடி தர வேண்டும் என்று மிரட்டுகிறான். அர்ச்சனா பயந்து சிறிதளவு பணத்தை கொடுத்து சமாளித்து வருகிறாள். தனது காதலியை காப்பாற்ற பணத்தை எப்படி புரட்டுவது என்று தெரியாமல் தவிக்கும் மணியும், நண்பர் ரமேஷ் திலக்கும் 50 லட்சம் பணத்திற்காக லிங்காவின் வலையில் சிக்குகிறார்கள். லிங்கா தொழிலதிபர் அசோக் மனைவி அர்ச்சனா மற்றும் மகள் அனுவை அழைத்துக் கொண்டு ஊட்டி கெஸ்ட் ஹவுஸ் செல்லும் போது வழியில் கடத்த திட்டம் போட்டு மணியிடம் கொடுக்கிறார். திட்டமிட்டபடி நடந்தாலும் இவர்கள் கடத்துவதற்கு முன் அடையாளம் தெரியாத கும்பலால் மகள் அனு கடத்தப்படுகிறார். அசோக்கும் அர்ச்சனாவும் அதிர்ச்சியாகி குழந்தையை தேடுகின்றனர். மகள் அனுவை கண்டுபிடிக்க நெருங்கும் போது குழந்தை அனு ஒவ்வொரு முறையும் பலரால் கடத்தப்படுகிறார். தொழிலதிபர் மகள் என்று தெரிந்த பின் பணத்திற்காக கடத்தப்படும் மகள் அனுவை மீட்டார்களா? அர்ச்சனா லிங்காவின் மிரட்டலுக்கு அடி பணிந்தாரா? இல்லையா? மணி இறுதியில் குழந்தையையும், காதலியையும் பத்திரமாக மீட்டுக் கொடுத்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.
அப்பாவி மணியாக ஜி.வி.பிரகாஷ்குமார் தேவையில்லாத போதைப்பொருள் சிக்கலில் மாட்டிக் கொண்டு போலீசிற்கும் போக முடியாமல் காதலியையும் மீட்க முடியாமல் தவிப்பதும், சூழ்நிலை கைதியாக பிளாக்மெயில் செய்யும் வேலையில் மாட்டிக் கொண்டு வெளி வர முயற்சிக்கும் போது பலவித சிக்கல்களில் தொடர்ச்சியாக சிக்கி வெளி வர எடுக்கும் முயற்சிகள் என்று அனைத்து காட்சிகளிலும் இயல்பான முகபாவனைகளுடன் அசாதாரணமாக உடல்மொழியுடன் நடித்துள்ளார்.
தவறான நபரை காதலித்து பின்னர் அவனிடமிருந்து தப்பித்து நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அர்ச்சனாவாக பிந்து மாதவி, பின்னர் பிளாக்மெயிலில் சிக்கி பணத்தை கொடுக்க முடியாமல், குழந்தை கடத்தலில் தன் முன்னாள் காதலனின் பங்கு இருக்கிறது என்பது தெரிந்தும் வெளிக்காட்ட முடியாமல் குழந்தையை காப்பாற்ற போராடும் தாயின் பரிதவிப்பை உள்ளன்பை பிரதிபலிக்கும் உணர்ச்சிகள் நிறைந்த கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.
தொழில் அதிபராக ஸ்ரீPகாந்த் மகளை காணாமல் பின்னர் மீட்க ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் திட்டம் தீட்டி செயல்படுத்தி பின்னர் பணத்தை பறிகொடுத்தாலும், மகளை மீட்கலாம் என்ற அசாத்திய தைரியத்துடன் களமிறங்கும் துணிச்சலான தந்தையாக, மனைவியின் தவறை புரிந்து கொண்டு மன்னித்து கடந்து செல்லும் கணவனாக மனதில் நிற்கிறார்.
வில்லனாக லிங்கா, காதலியாக தேஜூ, நண்பனாக ரமேஷ் திலக், மருந்து விநியோகஸ்தரும் போதைப்பொருள் கடத்துபவராக முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ஷாஜி, ஹரி பிரியா ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களாக வந்து கடத்தல் சம்பவங்களின் பின்னணிக்கு பக்கபலத்தை கொடுத்துள்ளனர். கடத்தப்படும் பெண் குழந்தையின் நடிப்பு பயப்படாமல் ஒவ்வொரு காட்சியிலும் தப்பித்து சென்றுக் கொண்டே இருக்கும் அழகு வியக்க வைக்கிறது.
கோகுல் பினாய் மருந்து கிடங்கு, கடத்தல், திருப்பங்கள் நிறைந்த பிளாக்மெயில் காட்சிகளுக்கு, மால் பார்க்கிங்கில் நடக்கும் மும்முரமான காட்சிகளின் பண பரிமாற்றங்கள் என்று அபரிதமான உழைப்பை கொடுத்து காட்சிக் கோணங்களில் விறுவிறுப்பையும் உயிர்ப்பும் ஏற்படுத்தி திறம்பட கொடுத்துள்ளார்.
சாம் சி.எஸ்.ஸின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். திருநங்கைகள் பாடி நடனமாடும் பாட்டு கேட்கும் ரகமாக கவனிக்க வைக்கிறது.
படத்தொகுப்பு சான் லோகேஷ் இன்னும் எடிட் செய்து திகட்டும் கடத்தல் காட்சிகளை குறைவாக காட்டியிருக்கலாம்.
முதலில் கடத்தல் த்ரில்லரில் தொடங்கி பின்னர் பிளாக்மெயிலாக மாறும் ஒவ்வொரு காட்சியும் புதிரான முடிச்சை கொடுத்து, அதில் பின்னப்பட்டிருக்கும் குழப்பம், பதற்றத்தை ஏற்படுத்தி பின்னர் க்ளைமாக்ஸில் உண்மையான கடத்தல்காரனின் வெளிப்பாட்டை நேர்த்தியுடன் கையாண்டிருக்கிறார் இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே போன்ற படங்களை இயக்கிய மு.மாறன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உண்டான சிக்கல்கள், சுயநலங்கள், பேராசைகள், துரோகங்கள் ஆகியவற்றை சமரசம் செய்யாமல் நேர்த்தியாக கொடுத்திருந்தாலும் திருப்பங்கள் என்ற பெயரில் கடத்தல் சம்பவம் நீண்டு கொண்டே போவது ஒரு குறிப்பிட்ட காட்சிகளுக்கு பிறகு அயர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. கடத்தல், பிளாக்மெயில் என்றாலும் யூகிக்கமுடியாத திரைக்கதை, நேர்த்தியான நடிகர்கள், தேர்ந்த தொழில்நுட்பகலைஞர்களின் அளப்பறிய பணியால் த்ரில்லர் சாம்ராஜ்ஜியத்தில் மிளிர்கிறது.
