Thu. Mar 27th, 2025
கூரன் படம்/thiraiosai.comகூரன் படம்/thiraiosai.com
Spread the love

நீதி கேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘கூரன் ‘ திரைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் படத்தைப் பார்த்துவிட்டு, பேசும்போது, “எப்போதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் மிகப்பெரிய இயக்குநர் எஸ்.ஏ.சி. அவர்கள். அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பது உலகத்திற்கே தெரியும். அவர் திரைக்கதையில் ஒரு மன்னர். அவர் செய்த மிகச் சிறந்த திரைக்கதை இளைய தளபதி விஜய். 1992ல் நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் தனது மகனை அறிமுகப்படுத்தினார். அவரது மகன் 26-வது வருடத்தில் என்ன தீர்ப்பு எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவு பெரிய ஆரூடம் தெரிந்தவர் எஸ்.ஏ.சி. அவர் ஒரு சிறந்த நடிகராக இந்த ‘கூரன்’ படம் பார்த்தபோது எனக்குத் தெரிந்தது. இதற்கு முன்பு அவர் நடித்த சில படங்களை நான் பார்த்து இருந்தாலும் இதில் நடித்திருந்த அவரது பாத்திரம் சிறப்பாக இருந்தது.

இந்த நாய் தனது உணர்வை எப்படி வெளிப்படுத்தும்? அதற்காக இவர் எப்படி வழக்காடுவார்? இந்த ஆர்வத்தோடு தான் நான் படம் பார்த்தேன். படத்தில் அது கொஞ்சமும் குறையாமல் இருந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி. இது அவருக்கு முதல் படம். ஆனால் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அழகாகத் திரைக்கதை அமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வழக்கமான பாதையை விட்டுவிட்டுப் புதிதாகச் சிந்திக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த வகையில் அமைந்துள்ள இந்தப் படத்தில் பெரிய பலமாக இருப்பது நடிக்காத அந்த நாய். இயல்பாக இருக்கிற அதன் உணர்வுகளைப் படம் பிடித்து, சரியாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.

அதன் பிறகு படத்தில் பிடித்தது மிகச் சிறப்பாக நடித்து இருக்கும் எஸ்.ஏ.சி. அவர்கள். அவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். அவர் நடித்திருக்கும் காட்சிகள், பேசி இருக்கும் வசனங்களுக்குப் பல இடங்களில் கைத்தட்டல் கிடைக்கும். இந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள படம் என்று நினைக்கிறேன்.

வீட்டில் நம் எல்லோருக்கும் குழந்தைகள் பிடிக்கும். குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகளைப் பிடிக்கும். குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகள் பிடிப்பது போல் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். எஸ்.ஏ.சி. அவர்கள் எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பவர்; வெற்றி பெற நினைப்பவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்! “இவ்வாறு பார்த்திபன் பாராட்டிக் கூறியுள்ளார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *