ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இருவரும் கல்லூரியில் படித்த போது காதலித்து, பின்னர் பிரிந்தவர்கள். போர்ச்சுகல் நாட்டில் ஒரு கொலைக் குற்றத்திற்காக அதிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அது தெரிந்த ஆகாஷ் காதலியைக் காப்பாற்ற போர்ச்சுகல் செல்கிறார். அவரது கைதுக்குப் பின் உள்ள மர்மங்களை அங்குள்ள வக்கீலான கல்கி கோச்சலின் உதவியுடன் கண்டுபிடிக்க முயல்கிறார். காதலி அதிதியைக் காப்பாற்றி மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.
‘நேசிப்பாயா’ என காதல் மூடில் தலைப்பு வைத்துவிட்டு, கொஞ்சம் காதல், நிறைய திரில்லர் என படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். காதல் காட்சிகள்தான் கொஞ்சமாக உள்ளது. ஆனால், அந்த நிறைய திரில்லருக்குப் பின்னால் நிறைய காதல் இருப்பதுதான் காரணமாகவும் அமைகிறது. படம் ஆரம்பமான சில நேரத்திலேயே முக்கியக் கதைக்குப் படம் போய்விடுகிறது. ஆகாஷ், அதிதி இடையிலான காதலையும், அவர்கள் பிரிவிற்கான காரணத்தையும் சுருக்கமாகவே சொல்லி முடித்துவிட்டார் இயக்குனர். அதன்பின் பெரும்பாலான படம் போர்ச்சுகல் நாட்டில்தான் நடக்கிறது. அறிமுக நடிகரான ஆகாஷ் முரளி முதல் படம் போல இல்லாமல் நடித்துள்ளார். உயரமும், தோற்றமும் ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்ததாக உள்ளது. ஆனால், முதல் படத்தில் காதல் நாயகனாக அறிமுகமாகி உள்ளார். சீக்கிரமாகவே அவரை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிவிடுவார்கள். படத்தில் காதல் கொஞ்சமாக இருந்தாலும் காதலி அதிதி மீது ஆகாஷ் வைத்துள்ள காதலுக்கு அளவே இல்லை. அந்த அளவில்லாத காதல்தான் அவருடைய காதலுக்கே பிரச்னையாக முடிகிறது.
இந்தப் படத்தில் அதிதி அவருடைய துருதுருவை நிறையவே குறைத்துக் கொண்டு நடித்திருக்கிறார். ஆகாஷ் உடனான அவருடைய ஆரம்ப கட்டக் காட்சிகள் புதிதாய் அமைந்துள்ளன. ஆகாஷை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் அவரை விட்டுப் பிரிகிறார். போர்ச்சுகலில் சிறைப் பறவையாய் ஆன பின் அவர் மீது பரிதாபம்தான் வருகிறது. போர்ச்சுகல் வக்கீலாக கல்கி கோச்சலின் பொருத்தமாக நடித்திருக்கிறார். சரத்குமார், ‘கடலோரக் கவிதைகள்’ ராஜா, பிரபு, குஷ்பு ஆகியோர் ஓரிரு காட்சிகளில்தான் வந்து போகிறார்கள். யுவனின் இசையில் பாடல்கள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். ஆனாலும், பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார். கேமரூன் எரிக் பிரைசனின் ஒளிப்பதிவில் போர்ச்சுகல் பல வித கோணங்களில் பதிவாகி உள்ளது. ஆரம்பம் முதல் கடைசி வரை படம் தொய்வில்லாமல் நகர்கிறது. ஆனாலும், நம் மனதில் அழுத்தமாய் பதியும் படியான காட்சிகள் குறைவாகவே உள்ளது. சென்னை, பெங்களூர் காட்சிகள் ரசிக்க வைத்த அளவிற்கு போர்ச்சுகல் போன பின் காட்சிகளில் ஒரு அழுத்தம் இல்லை. ஏதோ விட்ட குறை தொட்ட குறையாக பார்க்கும் உணர்வை மட்டுமே தருகிறது.