கட்டிடக் கலை நிபுணர் நித்யா மேனன். ஜான் கொக்கேனை நான்கு வருடங்களாகக் காதலித்து ஜான் வெளிநாடு செல்ல ஒரு பதிவுத் திருமணமும் செய்து கொள்கிறார். முறையான திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஜான் ஒரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதைப் பார்த்து, திருமணத்தை நிறுத்திவிடுகிறார். குழந்தைகள் மீது அதிக ஆசை இருக்கும் நித்யா, ‘ஸ்பெர்ம் டோனர்’ மூலம் கருத்தரித்து ஆண் குழந்தை ஒன்றை பெற்றுக் கொள்கிறார். எட்டு வருடங்களுக்குப் பிறகு ஏற்கெனவே பெங்களூருவில் சந்தித்த ரவி மோகன், நித்யா மேனன் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டில் பக்கத்து பிளாட்டில் வந்து தங்குகிறார். நித்யா மேனனின் பத்து வயது மகனும், ரவிமோகனும் நெருங்கிப் பழகுகிறார்கள். அது நித்யா, ரவி இடையிலும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால் நித்யா மேனனுக்கு ‘ஸ்பெர்ம் டோனர்’ ஆக இருந்தது ரவி மோகன். இது அவர்கள் யாருக்குமே தெரியாது. இந்நிலையில் ரவி, நித்யா இணைந்தார்களா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.
கதை கொஞ்சம் விவகாரமான கதையாக இருந்தாலும் அதை விரசமில்லாமல் ஒரு நேர்த்தியான உணர்வுவூர்மான காதல் கதையாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. ஒரு பெண் இயக்குனரின் பார்வையில் ஒரு பெண்ணுக்கான காதல் உணர்வு, திருமண உணர்வு, குழந்தை உணர்வு எப்படி இருக்கும் என்பதை இந்தக் காலத்துப் பார்வையில் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு மெச்சூர்டான காதல் கதையைப் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது. ஒரு காலத்தில் இப்பட சிக்கலுக்குரிய காதல் கதைகளை பாலசந்தர் மட்டுமே படமாக்குவார். அப்படியான ஒரு சிக்கல் காதல் கதையை கிருத்திகா எழுதி, அதை உணர்வுபூர்வமாகவும் எடுத்து ஆச்சரியப்பட வைத்துள்ளார். கொஞ்சம் எல்லை கடந்திருந்தாலும் விரசமாகிவிடக் கூடிய திரைக்கதை. ஆனால், அதை மிகச்சரியாகக் கையாண்டிருக்கிறார். அதற்கு தனி பாராட்டுக்கள். இருந்தாலும் அந்த ஒரு காதலுடன் நிறுத்தி இருக்கலாம். ஓரின காதல் திருமணத்தையும் ஒரு கிளைக்கதையாக வைத்திருப்பது, பார்வையாளர்களுக்கு நெருடலைத் தர வாய்ப்புள்ளது.
தனி கதாநாயகனாக நடித்து தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ரவி மோகனுக்கு இந்தப் படம் நிச்சயம் மாற்றத்தைக் கொடுக்கும். இதுவரையில் நடித்த படங்களை விட இந்தப் படத்தில் ரவி மோகனின் கதாபாத்திரமும், அதில் அவரது அழுத்தமான நடிப்பும் பாராட்ட வைக்கிறது. இதற்கு முன்பு ரவியின் இந்த நடிப்பை யாரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நித்யா மேனன் நடிப்பு பற்றி சொல்லவே வேண்டாம். இந்தக் காலத்து மாடர்ன் மங்கையாக உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலனால் ஏமாற்றம் அடைந்து, அம்மாவால் வெறுக்கப்பட்டு, குழந்தை பெற்றுக் கொண்டு தனியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஒரு பக்கம் மகன் மீதான பாசம், மறு பக்கம் ரவி மோகன் மீதான பட்டும் படாமல் இருக்கும் காதல் என காட்சிக்குக் காட்சி படம் முழுவதும் நித்யாவின் நடிப்பு திரையை ஆக்கிரமித்துள்ளது.
படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் நித்யா மேனன் தான். அந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்துதான் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. அதனால், ரவி மோகன் – டிஜே பானு இடையிலான காதல் பற்றி ஆரம்பத்தில் கொஞ்சம் டீடெயிலாக சொல்லிவிட்டு அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஆனாலும், கிளைமாக்சில் வந்து “நீ காதலிச்சா எப்படி இருப்பன்னு எனக்குதான் தெரியும்,” என டிஜே பானு ஒரு அழுத்தமான வசனம் பேசி மனதில் இடம் பிடிக்கிறார். ரவி மோகனின் நெருங்கிய நண்பர்களாக வினய், யோகி பாபு. ஓரின காதல் எண்ணத்தில் உள்ளவராக வினய். யாரும் ஏற்று நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருக்கிறார். யோகி பாபு படத்தில் இருக்க வேண்டும் என கிடைத்த நாட்களில் அவரை வைத்து சில காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார்கள். குறைவான நேரம் வந்தாலும் லட்சுமி ராமகிருஷ்ணன், மனோ, வினோதினி யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். நித்யா மேனன் மகனாக நடித்திருக்கும் ரோஹன் சிங் துறுதுறுவென நடித்திருக்கிறார்.
ஏஆர் ரஹ்மான் இசைதான் படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தி இருக்கிறது. பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் ஹைலைட். கேவ்மிக் ஏரி ஒளிப்பதிவு அப்படி ஒரு தெளிவு, அழகு. உணர்வுபூர்வமான படத்திற்கு குளோசப் காட்சிகள் எவ்வளவு முக்கியம் என்பதை அருமையாய் பதிவு செய்திருக்கிறார். ஆண்கள் துணை இல்லாமல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டு வாழ முடியும் என ஒரு பக்கமும், பெண்கள் துணை இல்லாமல் ஆண்களும் குழந்தை பெற்று வாழ முடியும் என மறு பக்கமும் சொல்லி இருக்கிறார். மன ரீதியாக அது தேவை இல்லை என்றாலும், உடல் ரீதியாகவும் தேவை இல்லை என்றாலும் மருத்துவ ரீதியாக இருவரது தேவையும் அவசியம் என்பதையும் அழுத்தமாய் சொல்லியிருக்க வேண்டும்.