நாயகன் சமுத்திரகனி, மனைவி அனன்யா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் கேரளா அருகே உள்ள குமுளி பகுதியில் வாழ்ந்து வருகிறார். லாட்டரி சீட்டு கடை வைத்து பிழப்பு நடத்தி வரும் இவர் மிகவும் நேர்மையானவர். ஒருநாள் குடும்ப கஷ்டத்தில் இருக்கும் பாரதிராஜா, சமுத்திரகனி கடைக்கு சென்று லாட்டரி சீட்டு வாங்குகிறார். தன் காசை தவரவிட்டதால் சீட்டை எடுத்து வைக்கும்படி சொல்லிவிட்டு செல்கிறார். சமுத்திரகனியும் அந்த லாட்டரி சீட்டை தனியே எடுத்து வைக்கிறார். இந்த நிலையில் அந்த லாட்டரி சீட்டுக்கு ரூபாய் 1.50 கோடி பணம் விழுகிறது. அந்த லாட்டரி சீட்டை பாரதிராஜாவிடம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், சமுத்திரகனியின் மனைவி அனன்யா குடும்ப கஷ்டம் இருக்கிறது என்று சொல்லி பாரதிராஜாவிடம் அந்த லாட்டரி சீட்டை கொடுக்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்துகிறார். ஆனால், சமுத்திரகனியோ தன் மனைவி சொல்வதை ஏற்க மறுத்து பாரதிராஜாவை தேடி செல்கிறார். ஒரு பக்கம் போலீஸ் சமுத்திரகனியை தேடுகிறது. இறுதியில் சமுத்திரக்கனி அந்த லாட்டரி சீட்டை பாரதிராஜாவிடம் கொடுத்தாரா? இல்லையா? சமுத்திரக்கனியை போலீஸ் தேட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சமுத்திரகனி, நேர்மையான மனிதராக மனதில் பதிகிறார். இப்படி ஒருவர் இருப்பாரா என்று ஆச்சரியப்படும் வகையில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனைவி மற்றும் குழந்தைகளிடம் பிளாஷ் பேக் பேசும் போது நெகிழ வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அனன்யா, குடும்ப சூழ்நிலையை சொல்லும் பொறுப்புள்ள குடும்ப தலைவியாக நடித்து இருக்கிறார். அன்பாகவும், அதே சமயம் பணத்திற்காக கோபப்படும் காட்சிகளிலும் கவர்ந்து இருக்கிறார். பாரதிராஜா உடல் மொழியிலேயே பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். நாசர், இளவரசு, சின்னி ஜெயந்த் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
லாட்டரி சீட்டை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி. பணம் என்றவுடன் மனிதர்களின் குணம் எப்படி மாறுகிறது என்பதை சொல்லி இருக்கிறார். நேர்மையாகவும், உண்மையாகவும் ஒருவர் இருந்தால் அவருக்கு பணத்தை விட பெரிய சன்மானம் கிடைக்கும் என்பதையும் இயக்குனர் சொல்லி இருக்கிறார். முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி சில நாடக தன்மையாகவும் திரைக்கதை செல்கிறது. காமெடி காட்சிகள் பெரியதாக எடுபடவில்லை. லாட்டரி சீட்டை மையமாக வைத்து ஏற்கனவே வெளியான பம்பர் படத்தின் கதையும் இதேதான் என்பதால், திரு.மாணிக்கம் படம் பார்க்கும் போது சற்று சுவாரஸ்யம் குறைகிறது.
விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணியை ரசிக்க முடிகிறது. ஒளிப்பதிவு சுகுமாரின் கேமரா மலை பகுதிகளை அழகாக படம் பிடித்து இருக்கிறது. இப்படத்தை GPRK சினிமாஸ் தயாரித்துள்ளது.