டிகிரி கூட முடிக்காமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார் வசதியான கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த அன்சன் பால். அவருக்கு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ரெபா மோனிகா ஜான் மீது காதல் வருகிறது. தொடர் முயற்சிகளுக்குப் பின் ரெபாவையும் காதலிக்க வைத்துவிடுகிறார் அன்சன். அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இளம் காதல் ஜோடிகளாக அன்சன் பால், ரெபா மோனிகா ஜான் இருவரும் பொருத்தமாகவே நடித்திருக்கிறார்கள். காதல் கதைகளில் அந்த காதல் ஜோடிக்கான 'கெமிஸ்ட்ரி' திரையில் வெளிப்பட வேண்டும். இருவரது நடிப்பிலும் அது சரியாகவே வெளிப்பட்டுள்ளது.
அன்சன் பெற்றோராக மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், ரெபா அப்பாவாக ராஜா ஆகியோரது கதாபாத்திரங்கள் பெற்றோரின் பாசத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. காதல் கதை என்றால் நண்பன் இல்லாமலா, இந்தப் படத்திலும் அப்படி ஒரு நண்பனாக கிஷோர் ராஜ்குமார் நடித்திருக்கிறார். காதலர்களுக்கு உதவி செய்பவராக வெற்றிவேல் ராஜா மனதில் இடம் பிடிக்கிறார்.
காதல் கதைகளை ரசிப்பதற்கு இந்தக் காலத்தில் ரசிகர்கள் இருக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ள நிலையில் இப்படியான காதல் கதைகள் அபூர்வமாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. முன்னணி நடிகர்களின் ஆக்ஷன் கமர்ஷியல் படங்களே வசூலுக்காகத் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் அறிமுகமில்லாத நடிகர்களின் காதல் படங்களை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் ?. 90களில் வந்திருக்க வேண்டிய ஒரு காதல் கதையை இந்தக் காலத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ்குமார்.
காதல் கதை என்றால் பாடல்கள் இனிமையாக அமைந்தால்தான் படத்திற்கு பிளஸ் பாயின்ட். அதைத் சற்று தவறவிட்டாலும் பின்னணி இசையில் சமாளித்துள்ளார் இசையமைப்பாளர் விஷ்ணு பிரசாத். காதல் படம் என்றாலே இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் காதலைக் காட்டுவது தமிழ் சினிமாவில் வாடிக்கை. அப்படியான சில க்ளிஷேவான காட்சிகள் படத்தில் உண்டு. இருந்தாலும் கிளைமாக்சில் நாம் சிறிதும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை வைத்து கடைசி நேர பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது சிறப்பாகவே உள்ளது.