Mon. Oct 7th, 2024
Spread the love

டிமான்ட்டி காலனி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக டிமாண்டி காலனி 2 படத்தின் கதை தொடர்கிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்கிறார் பிரியா பவானி சங்கரின் கணவர். ஆனால், திடீர் என்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இவரின் ஆத்மா, பிரியா பவானி சங்கரிடம் ஏதோ சொல்ல வருவதாக உணர்கிறார். அதற்காக புத்த துறவிகள் மூலமாக கணவர் மரணத்தில் இருக்கும் பின்னணியை அறிய முயற்சி செய்கிறார்.

மறுபக்கம் ஐதராபாத்தில் இருக்கும் அருள்நிதி தனது தந்தையின் சொத்தை அடைய முயற்சி செய்கிறார். ஆனால், அதில் தம்பி அருள்நிதி சென்னையில் இருப்பதாகவும் அவருடைய கையெழுத்தை பெற நினைக்கிறார். முதல் பாகத்தில் இறந்துப் போன அருள்நிதிதான் இவருடைய தம்பி ஆவார். ஆனால் இன்னும் அந்த அருள்நிதி சாகவில்லை கோமா நிலையில் உள்ளார். இவரை கொன்றால் தான் சொத்து அவருக்கு கிடைக்கும் என திட்டமிடுகிறார்.

தம்பியை கொள்ள போகும் போதுதான், தம்பி இறந்தால் தானும் இறந்துவிடுவோம் என்ற உண்மையை புரிந்துக் கொள்கிறார். பிரியா பவானி சங்கர், தன்னுடைய கணவன், இறப்பிற்கும், தம்பி அருள்நிதி சாவின் விழிம்பில் இருப்பதற்கும் டிமான்ட்டி காலனிக்கும் உள்ள தொடர்பை கண்டுப் பிடிக்கிறார். 6 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இச்சம்பவம், சாத்தானுக்கு மனிதர்களை பலியிடும் வழக்கத்தை ஒரு குழு வைத்துள்ளனர். இம்முறை இந்த பலிக்கு ஆளாக போவது அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும், சாத்தானின் பிடியில் இருந்து எப்படி தப்பித்தார்கள்? பிரியா பவானி சங்கரின் கணவர் எதனால் இறந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

அருள்நிதி இக்கதைக்கு தேவையான அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திகில் காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் நாயகியான பிரியா பவானி சங்கர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அமானுஷ்யத்திற்கு பயப்படும் காட்சிகளிலும், கணவனை இழந்த துயரத்தில் பரிதவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அர்ச்சனா சில காட்சிகளில் வந்தாலும் மக்கள் மனதில் பதிந்துவிடுகிறார். தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என்றாலே முந்தைய பாகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் புதிய கதையை படமாக எடுப்பார்கள். ஆனால் இப்படத்தில் அஜய் ஞானமுத்து சாமர்த்தியமாகவும் தெளிவாகவும் முந்தைய பாகத்துடன் இணைத்துள்ளார் அதற்கு பாராட்டுகள்.

வழக்கமான ஹாரர் படத்தில் வரும் டெம்பிலேட்டுகள் இல்லாமல், தேவையற்ற பாடல்கள், நடனங்கள், பேய்க்கு ஒரு பின் கதை என எதுவும் இல்லாமல் இருப்பது சிறப்பு. டிமான்ட்டி காலனி படத்தை பொறுத்தவரை சாத்தான் வழிபாடு, ஆண்டி கிறிஸ்து, டிமான்ட்டி செயின் என கதையை நகர்த்தி இருக்கிறார். கதையின் முதல் பாதி சிறப்பாக அமைந்தாலும், அதனுடைய தாக்கம் இரண்டாம் பாதியில் இல்லை. இரண்டாம் பாதியின் திரைக்கதையின் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும். படத்தில் ஹாரர் காட்சிகள் மிகவும் குறைவு. இன்னும் அதிக திகில் காட்சிகள் இடம் பெற்று இருக்கலாம். சாம் சி. எஸ் இன் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் அவரது ஒளிப்பதிவின் மூலம் திகிலடைய முயற்சி செய்துள்ளார். பிடிஜி யூனிவர்சல் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *