Fri. Oct 4th, 2024
Spread the love

தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘கோட்’. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். மேலும், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

கதையில், கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர, SAT squad டீம் களம் இறங்குகிறது. அதில் விஜய் (காந்தி), அஜய் (அஜய்), பிரசாந்த் (சுனில்), பிரபுதேவா (கல்யாண்) ஆகியோர் ஆயுதங்களுடன் களம் இறங்குகிறார்கள். அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது. இதற்கிடையே தாய்லாந்திற்கு தனது மனைவி (சினேகா) உடன் செல்லும் காந்தி, தனது மகனை பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால் கடைசியில், அவனை காந்தி ஒரு பிரச்சனையில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சனை என்ன? காந்திக்கு வில்லனாக ஜீவன் (விஜய் மகன்) மாறியது எப்படி? என்பதுதான் படத்தின் மீதி கதை.

நீண்ட நாட்களாக சீரியஸான ரோல்களில் தோன்றி வந்த விஜய் இந்தப் படத்தில் காதல், காமெடி, கிண்டல், எமோஷன், சைலன்ட், டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அனைவருக்கும் ஒரு கூஸ்பம்சாக இருக்கிறது. சிறிய வயது விஜயை காட்டிய டி-ஏஜிங் டெக்னாலஜியில் சில குறைபாடுகள் இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தில் விஜய் தன் நடிப்பால் அதை சரி செய்துள்ளார். தளபதி விஜயை, இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தில் மங்காத்தா அஜித் போல காட்ட முயற்சி செய்துள்ளார். நடிகர் மோகனை இப்படத்தில் வில்லனாக காட்டியது ஒர்க் அவுட் ஆகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நடிகை சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா முடிந்தவரை படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்கள். அதே போல் படத்தின் பாடல்கள் வெளியான போது சில விமர்சனங்கள் வந்தாலும், யுவனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து உள்ளது.

மேலும், படம் குறித்த தகவல்கள் ஏற்கனவே சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில், அவை அனைத்தும் படத்தில் அப்படியே இருக்கின்றன. அதனால், படம் பார்ப்பவர்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்பா-மகன் சண்டையை திரைக்கதையில் சொல்ல நினைத்த இயக்குனர், அதில் சிறிது கவனம் செலுத்திருக்கலாம். அதாவது சண்டைக் காட்சிகளில், காந்தியுடன் மோதுவது அவரின் மகன் ஜீவன் என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்ததை, SAT ஸ்குவாடில் பணிபுரியும் திறமை வாய்ந்த காந்தி கண்டுபிடிக்க மாட்டார் என்று சொல்வதில் லாஜிக்கே இல்லை. படத்தின் முதல் பாதி சிறிது மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதையில் இயக்குனர் அதை சரி செய்துள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் நடிகர் யோகி பாபுவின் கவுண்டர்கள் ரசிகர்களை சிரிக்க வைக்க தவறவில்லை. மற்றபடி திரைக்கதையில், சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக கிளைமாக்ஸில் ஐபிஎல் போட்டியையும், திரைக்கதையையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது. யுவனின் இசை, தளபதி விஜயின் நடிப்பு மாஸ், காமெடி சூப்பர், படம் விறுவிறுப்பாக செல்கிறது போன்றவைகள் நிறைவாக இருக்கிறது.

கேப்டனின் AI காட்சி ஏமாற்றம், ஒரு சில லாஜிக் குறைபாடுகள், சஸ்பென்ஸ்கள் சோசியல் வீடியோ மூலம் ஏற்கனவே ரிவில் ஆனதால், படம் பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்தவில்லை. தந்தை மகனுக்கு இடையிலான மோதல் தான் படத்தின் கதை. மங்காத்தா அஜித் போல விஜயை ஒரு வில்லனாக காட்டும் முயற்சியில் வெங்கட் பிரபுவால் ஈடு செய்ய முடியவில்லை. பிரசாந்த், பிரபுதேவாவிற்கு நல்ல கதாபாத்திரம், மீனாட்சி வெறும் ஷோகேஸ் பொம்மை, கேப்டனின் AI காட்சி ஏமாற்றம், யுவன் இசை பலம், தமிழ் சினிமாவில் நாம் பார்த்து ஓய்ந்த கதை தான் GOAT. அதுவும் படத்தின் நீளம் 3 மணி நேரம், நம்மை சோர்வடைய செய்கிறது. மொத்தத்தில் தளபதி விஜயின் ‘கோட்’ பொது பார்வையில் சுமார் ரகம் தான்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *