முடி வெட்டும் தொழில் செய்து வரும் நாயகன் விஜய் சேதுபதி மனைவி திவ்யா பாரதி மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு விபத்தில் மனைவியை இழக்கிறார் விஜய் சேதுபதி. அந்த விபத்தில் ஒரு இரும்பு குப்பை தொட்டி மூலம் இவரது மகள் உயிர் தப்பிக்கிறார்.
இதிலிருந்து அந்த இரும்பு குப்பை தொட்டிக்கு லட்சுமி என்று பெயர் வைத்து மகளுடன் பாதுகாத்து வருகிறார் விஜய் சேதுபதி. ஒருநாள் அந்த குப்பை தொட்டி காணவில்லை என்று விஜய் சேதுபதி போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கிறார். ஆனால், போலீஸ் அதிகாரி நட்டி நட்ராஜ் புகார் எடுக்க மறுக்கிறார். மகள் வீட்டிற்கு திரும்புவதற்கு முன்பு அந்த குப்பை தொட்டியை கண்டு பிடிக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி முயற்சி செய்கிறார். இறுதியில் விஜய் சேதுபதி இரும்பு குப்பை தொட்டியை கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். மகள் மீது பாசம் காட்டும் போது நெகிழ வைத்து இருக்கிறார். ஸ்கூல் பிரின்சிபல், தன் மகளிடம் மன்னிப்பு கேட்க வைக்கும் காட்சிகளிலும், புகார் எடுக்க மறுக்கும் போது போலீஸ் ஸ்டேசனில் வெளியே செல்லும் காட்சியிலும் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.
வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் அனுராக் காஷ்யப். இவரது எதார்த்த நடிப்பு ரசிக்க வைக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் மிரள வைத்து இருக்கிறார். இவரது மனைவியாக வரும் அபிராமி, கணவரை நினைத்து வருந்தும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். சிங்கம் புலி எதிர்பாராத நடிப்பை கொடுத்து இருக்கிறார். சண்டை காட்சியில் பாய்ஸ் மணிகண்டன் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
விஜய் சேதுபதியின் மகளாக வரும் ஷைநிகா துணிச்சலான நடிப்பை கொடுத்து இருக்கிறார். திவ்யா பாரதி மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோருக்கு பெரியதாக வேலை இல்லை. போலீஸ் அதிகாரி நட்டி நட்ராஜ் கிளைமாக்ஸ் காட்சியில் வாவ் சொல்ல வைக்கிறார். காமெடியில் கலக்கி இருக்கிறார் கல்கி.
இரும்பு குப்பை தொட்டியை மையப்புள்ளியாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நித்திலன். கதாபாத்திரங்கள் தேர்வு மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை. திரைக்கதை அமைத்த விதத்திற்கு பெரிய பாராட்டுக்கள் தரலாம். படம் பார்க்கும்போது அடுத்து இதுதான் நடக்கும் என்று எதிர்பார்த்தாலும், அதிலும் வித்தியாசமும் காண்பித்து இருக்கிறார் நித்திலன்.
அஜனிஸ் லோக்நாத் இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி செய்துள்ளது. தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம் சண்டை காட்சிகள் மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் & தி ரூட் நிறுவனம் மகாராஜா திரைப்படத்தை தயாரித்துள்ளது.