Sat. Nov 16th, 2024
Spread the love

ஏழை இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் பிருத்விராஜ். அவரது மனைவி அமலா பால். சில மாதங்களில் குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறார். நன்றாக சம்பாதித்து மனைவி மற்றும் பிறக்கும் குழந்தையை வாழ வைக்க வேண்டும் என்ற ஆவலில் அரபு நாட்டிற்கு வேலைக்குச் செல்கிறார். அங்கு வேறொரு ஏஜென்ட் மூலம் கடத்தப்படுகிறார். பாலைவனத்தில் ஆடுகளை மேய்க்கும் வேலைக்கு பிருத்விராஜ் துப்பாக்கி முனையில் அமர்த்தப்படுகிறார். எதிர்க்க முடியாமல் அடிபணிந்து அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்துத் விடுகிறார். சரியான குடிநீர், உணவு, ஏன் குளிக்கக் கூட முடியாமல் சில வருடங்கள் கடந்து போகிறது வாழ்க்கை. அதே போல தன்னுடன் வந்து சிக்கிக் கொண்ட ஊர்க்காரன் ஒருவரை சந்திக்கிறார். அவர்களைப் போல வேலைக்கு வந்த ஆப்பிரிக்கர் ஒருவர் மூலம் தப்பிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை .

2008ல் வெளிவந்த பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு படம். கதையின் நாயகன் உணரும் வலி நாவலைப் படிக்காதவர்களுக்கும் படத்தைப்பார்க்கும் போது கண்டிப்பாக வரும். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பிருத்விராஜ்.

நஜீப் முகம்மது என்ற கதாபாத்திரத்தில் பிருத்விராஜ். ஆரம்பக் காட்சியில் விமான நிலையத்தில் தன்னுடன் வந்த இளைஞனுடன் எப்படி போவது, எங்கே போவது, யார் வந்த அழைத்துச் செல்வார்கள் எனத் தவிக்கும் போதே, என்னமோ நடக்கப் போகிறது என்ற உணர்வைர் ஏற்படுத்திவிட்டார் இயக்குனர்.

ஆடு மேய்க்க அடிமையாக கொண்டு செல்லப்பட்ட பின் அவர் சந்திக்கும் பிரச்னைகள் ஒவ்வொன்றும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. கதாபாத்திரத்திற்காக தன்னை எந்த அளவு மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது சினிமாவின் மீதான அவரது காதல் புரிகிறது. பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் பிருத்விராஜ், அமலா பால் சம்பந்தப்பட்ட காட்சிகள் அவ்வப்போது வந்து போகிறது. அதையும் இடைவேளை வரை மட்டுமே காட்டுகிறார்கள். இடைவேளைக்குப் பின்பு கடுமையான வலியைத் தரக் கூடய காட்சிகள் வரும் என்பதால் முன்பாகவே இப்படி காட்டிவிட்டார்கள்போல. ரயிலில் ஏறிச் செல்லும் கணவன் பிருத்வியைப் பார்த்து ரயில் நிலையத்தில் கலங்கி நிற்கும் அமலா பால் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறார்.

பிருத்விராஜை கடத்திச் சென்று அடிமையாக்கும் கபில் கதாபாத்திரத்தில் தலிப் அல் பலுஷி, பிருத்விராஜ் தப்பிக்க உதவும் ஆப்பிரிக்கராக ஜிம்மி ஜீன் லூயிஸ், பிருத்வியுடன் வேலைக்குச் செல்லும் ஊர்க்காரனாக கே.ஆர் கோகுல் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாய் நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். உணர்வுபூர்வமான பல காட்சிகளில் அந்த வலியை இசையின் மூலம் நமக்குள் கடத்துகிறார். ஒளிப்பதிவாளர் கே.எஸ் சுனில் அவருடன் பணியாற்றிய உதவியாளர்கள் என அவரது குழுவினரை மொத்தமாய் பாராட்ட வேண்டும். அந்த பாலைவனத்தை பலவிதமாய் படமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் உணர்வும் முழுமையாய் அறியப்பட வேண்டும் என தொகுத்திருக்கிறார் எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத்.

எத்தனையோ படங்கள் வரலாம், போகலாம், ஆனால் சில படங்கள் மட்டுமே பல காலத்திற்குப் பிறகும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் படமாக இருக்கும். அந்த வகையில் இந்த படமும் நின்று பேசும். மெதுவாக நகரும் திரைக்கதை , குறைந்த கதாபாத்திரங்கள், பல இடங்களில் சப் டைட்டில் இல்லாமல் இருப்பது, சில இடங்களில் சப் டைட்டில் தவறாக இருப்பது என இந்தப் படத்திலும் சில குறைகளும் உண்டு. அவற்றையெல்லாம் கடந்து இந்தப் படம் தனித்துத் ஜீவனுடன் நிற்கிறது என்பதே உண்மை…

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *