இன்றைய மாறி வரும் பொருளாதார சூழல் ஆண் பெண் நட்பு, காதல், பெண்ணீயம் போன்ற பல விஷயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் நன்மை, தீமை இரண்டும் கலந்ததாக உள்ளது. இந்த இரண்டு பக்கங்களையும் சொல்லும் படமாக வந்துள்ளது, ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படம். நான்கு தனித்தனி கதைகளாக இப்படம் வந்துள்ளது. விக்னேஷ் கார்த்தி இப்படத்தை இயக்கி உள்ளார்.
ஒரு சினிமா தயாரிப்பாளரிடம் ஒரு உதவி இயக்குநர் கதை சொல்வது போல படம் தொடங்குகிறது. பெரியார், அம்பேத்கர் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஒரு இளைஞன் தனது வருங்கால மனைவியின் வீட்டாரிடம் ஒரு கண்டிஷன் போடுகிறான். திருமணம் செய்து கொண்டு மனைவி வீட்டுக்கு தான் நிரந்தரமாக செல்லப்போவதாகவும், ஆண், பெண் இருவரும் சமம் என்கிறான். இது முதல் கதை.
ஒரு ஆணும் பெண்ணும் தீவிரமாகக் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்யும்போது உறவு முறையில் இருவரும் அண்ணன், தங்கை முறை வேண்டும் என்று தெரிய வருகிறது. இந்த இருவரும் என்ன முடிவு எடுத்தார்கள் என்பது இரண்டாவது கதை.
தனது அருவெறுப்பான செயல்களால் வேலை இழக்கும் ஒரு இளைஞன், தனது உடலை வைத்து தவறான வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறான். இது ஒருகட்டத்தில் இந்த இளைஞனின் காதலிக்கு தெரிய வருகிறது. இதன் பிறகு நடப்பது மூன்றாவது கதை.
வறுமை நிலையில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவர் தனது மகளை ஒரு பிரபல தொலைக்காட்சி போட்டியில் பங்கேற்க வைக்கிறார். அப்பெண் மர்மமான முறையில் இறந்து போகிறார். இதற்குக் காரணம் அந்தத் தொலைக்காட்சி நிறுவனம்தான் என்று குற்றம் சுமத்துகிறார் அப்பெண்ணின் தந்தை. இது நான்காவது கதை.
பெண்ணுரிமை என்ற பெயரில் ஆண் தாலி கட்டிக்கொள்வது, பெண்ணைப் போன்று ஆண் வீட்டில் நடந்து கொள்வது என அபத்தங்களின் தொகுப்பாக முதல் கதை உள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது கதைகள் இப்படியெல்லாம் நம் சமூகத்தில் நடக்கிறதா என்ற பதைபதைப்பை நமக்குள் ஏற்படுத்துகிறது.
நான்காவது கதை, தொலைக்காட்சியில் வரும் கேம் ஷோக்கள் குழந்தைகள் மீது மனதளவில் எவ்வளவு பெரிய வன்முறையை திணிக்கின்றன என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது. இந்த நான்காவது கதை மட்டுமே, மனதிற்கு மிக நெருக்கமாகவும் நாம் பெற வேண்டிய விழிப்புணர்வு பற்றியும் பேசுகிறது.