Sun. Oct 6th, 2024
Spread the love

மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மகன்களான கதிர் (ஜி.வி.பிரகாஷ் குமார்), செல்வராஜ் (ஆதித்யா பாஸ்கர்) உள்ளிட்ட பலருக்குப் பாலக்காட்டிலுள்ள கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிப்பதற்கு இடம் கிடைக்கிறது. அங்கே செல்லும் தமிழ் மாணவர்களான இவர்களுக்கு எஸ்.எப்.ஒய் (S.F.Y) மற்றும் கே.எஸ்.கியூ (K.S.Q) என்ற கேரளக் கட்சிகளின் மாணவர் அமைப்பினர்களால் ரேகிங், சாதிய, இனக் கொடுமைகள் நடக்கின்றன. இதனைச் சமாளிக்க அவர்கள் செய்வது என்ன என்பதே `ரெபல்’ படத்தின் மீதி கதை.

படத்தின் ஆரம்பத்தில் வரலாற்றைச் சொல்வதாக அனிமேஷன் காட்சிகளில் ஆரம்பிக்கிறார்கள். அதில் எடுத்த உடனே மொழிவாரி மாநிலமாகப் பிரிப்பதற்கு முன்பு இந்தியா மூன்று மாகாணங்களாக இருப்பதாகப் பிழையுடன் ஆரம்பிக்கிறார்கள். உண்மையில் அப்போது 11 மாகாணங்கள் இருந்தன.

மலையாள மாணவர்களால் தமிழ் மாணவர்களுக்கு நடக்கும் கொடுமை, சண்டை, நாயகனுக்கும் நாயகிக்கும் நடக்கும் காதல் பாட்டு, மீண்டும் சண்டை என்பதாக யூகிக்கக்கூடிய திரைக்கதையிலேயே காட்சிகள் நகர்கின்றன. அதே போல் ஆதித்யா பாஸ்கர் கதாபாத்திரத்தைப் பார்த்தவுடனேயே அவரின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது. அதேதான் இறுதியிலும் நடக்கிறது.

படத்தில் இருக்கும் நல்லவர்கள் அனைவரும் தமிழர்களாகவும், நாயகியைத் தவிர்த்து அனைத்து மலையாளிகளும் பிரச்னைக்குரியவர்களாகவும் சித்திரித்திருக்கிறார் இயக்குநர். அப்படி நல்லவராகக் காட்டப்பட்ட நாயகியும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு தமிழ் பெண்ணுக்கான நியாயத்தைக் கண்டும் காணாமல் செல்வதாகக் காட்சிகள் நகர்கின்றன.

கல்லூரியில் நான்கு மலையாள மாணவர்கள் சேர்ந்து ஒரு தமிழ் மாணவரைக் கொல்வதாகக் காட்சி. அதன் வீரியம் விளங்கிய பின்னரும் அதீத வன்முறையை அங்கே கையாண்டது ஏன்? இப்படியொரு கல்லூரி எங்காவது இருக்குமா? என்னதான் அரசியல் பலம் இருந்தாலும், காவல்துறை ஒடுக்குமுறையைக் கையாண்டாலும் அனைவருக்கும் தெரிந்த ஒரு கொலையை அப்படியே மூடி மறைத்துவிட முடியுமா? இது கேரளாவில் 80-களில் நடந்த உண்மை சம்பவம் என்றாலும் அந்த வரலாற்றைச் சரியாகக் காட்சிப்படுத்தாமல் மலையாளிகள் அனைவருமே தவறானவர்கள் என்ற இனவெறுப்பைத்தான் படம் முழுவதும் சொல்கிறது.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் பங்களிப்பு ஓகே ரகம். குறைவான வெளிச்சத்தை வைத்துக்கொண்டு ஒளிப்பதிவு செய்திருக்கும் ஷாட்கள் மட்டும் கவனம் பெறுகின்றன. ஜி.வி.பிரகாஷ், சித்து குமார், ஆஃப்ரோ இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

படத்தொகுப்பாளர் வெற்றி கிருஷ்ணனின் கத்திரி பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை வரும் பில்டப் காட்சிகளின் மீது அதீத கருணை காட்டியுள்ளது. அதேபோல நீண்டு கொண்டே செல்கிற இரண்டாம் பாதியை இன்னும் சுருக்கியிருக்கலாம். தனியாக இருக்கும் விடுதி, அதிலுள்ள ஓவியம், தேர்தல் பிரசார ஓவியங்கள் எனக் கலை இயக்குநர் பாப்பாநாடு சி.உதயகுமார் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார்.

ஒரு காட்சியில் ரேகிங் பிரச்னை, அடுத்த காட்சியில் சாதிப் பிரச்னை, அதற்குத்தடுத்த காட்சிகளில் இனப்பிரச்னை, மொழிப் பிரச்னை என இயக்குநரும் குழம்பி நம்மையும் குழப்புகிறார்.

மொத்தத்தில் படத்தின் முதல் பாதி தொடங்கி மீண்டும் மீண்டும் வதைபடுத்தப்படும் காட்சிகளைச் சுழற்சியில் ஓடவிட்டு நம்மையும் வதைத்திருக்கிறார்கள். அதுவே இரண்டாம் பாதியிலும் ரிப்பீட் மோடில் ஓட்டுகிறது இந்த `ரெபல்’.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *