Thu. Feb 13th, 2025
Spread the love

சென்னை அன்னை சத்யா நகரில் வசித்துவரும் ஜே.பேபிக்கு (ஊர்வசிக்கு) செந்தில் (மாறன்), சங்கர் (தினேஷ்), செல்வி (மெல்லடி டார்கஸ்) உட்பட மொத்தம் ஐந்து பிள்ளைகள். பெயின்ட்டரான செல்வத்திற்கும், ஷேர் ஆட்டோ ஓட்டுநரான சங்கருக்கும் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வருகிறது. அங்கே சென்ற பின்புதான், அவர்களின் தாயான பேபி காணாமல் போனதும், இப்போது அவர் கொல்கத்தாவில் இருக்கிறார் என்பதும் தெரியவருகிறது. குடும்ப பிரச்னையால் சண்டை போட்டுக்கொண்ட இரு சகோதரர்களும் ஒன்றாக கொல்கத்தாவிற்குச் சென்று அவர்களின் தாயைப் பத்திரமாகக் கூட்டி வரவேண்டும் என்று உத்தரவிடுகிறார் காவல் ஆய்வாளர். சகோதரர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்னை?, பேபி ஊரை விட்டுப் போக காரணம் என்ன?, இந்தப் பயணமும், கொல்கத்தா நகரமும் அவர்களுக்கு கற்றுத் தரும் வாழ்க்கை பாடம் என்ன? இப்படி பல கேள்விகளுக்கான பதில்தான் இந்த படத்தின் கதை.

பேபியைத் தேடும் பயணத்தில் குடும்பத்தின் சூழல் மற்றும் பிரச்னைகளை இடையிடையே சொருகி நான் லீனியர் முறையில் நகரும் படத்திற்கு, நிதானமான திரைக்கதையும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பும் கைகொடுக்க, எளிதிலேயே படத்தோடு ஒன்றிவிட முடிகிறது. பதற்றத்தைக் கூட்டுவதற்காக இடைவேளையில் வைக்கப்பட்ட காட்சிகள் மட்டும் ஓவர் டோஸாக மாற, அதுவரையிலான திரைக்கதைக்கு அடிநாதமாக இருந்த எதார்த்தம் மிஸ் ஆகிறது.

முதற்பாதியில் ஆங்காங்கே தலை காட்டி வந்த ஊர்வசி, இரண்டாம் பாதியை முழுவதுமாக கையில் எடுக்கிறார். அவரின் சேட்டைகள், காமெடியான பேச்சுகள், மற்றவர்களிடம் வம்புக்குப் போவது, அதனால் அக்குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்னைகள், அதனால் பேபிக்கு ஏற்படும் குற்றவுணர்வு என்பதாக நீள்கிறது இந்த சீக்குவன்ஸ். ஆனால், பேபி கதாபாத்திரத்தின் உண்மை முகத்தைக் காட்டும் இந்தக் காட்சித் தொகுப்புகளின் நீளத்தைச் சற்றே குறைத்திருக்கலாம். ஏற்கெனவே பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்ட விஷயத்தை மீண்டும் மீண்டும் அதே பாணியிலான காட்சிகளால் இழுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி.

அதேவேளையில் சண்டை போட்டுக்கொண்ட அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலான உரசலையும், தயக்கங்களையும், அவை சரியாகும் தருணங்களையும் மிகையற்று உயிர்ப்போடு காட்சிப்படுத்தியிருப்பதோடு, அவற்றை ஒரு சில காட்சிகளோடு சுருக்காமல், முழு திரைக்கதையையும் கைபிடித்து அழைத்துப் போகும்படி எழுதியது ரசிக்க வைக்கிறது.

ஏரியா மக்களிடம் ரகளை செய்யும் இடம், மகன்களின் ஒற்றுமைக்காக அழும் இடம், மன ஒழுங்கின்மையாலும் குற்றவுணர்வாலும் பிதற்றும் இடம், தன் கவலைகளை மறைத்துக்கொண்டு போலியாகச் சிரிக்கும் இடம் என எல்லா காட்சிகளிலும் ஊர்வசி பட்டாசாக வெடித்திருக்கிறார். தன் முதிர்ச்சியான நடிப்பால் அழுத்தமான பேபி கதாபாத்திரத்தைக் கச்சிதமாகத் திரையில் உலாவ விட்டிருக்கிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு, உடையைச் சரிசெய்யும் இடங்கள் என நுணுக்கமான விஷயங்களிலும் தன் ஆளுமையைச் செலுத்தியிருக்கிறார்.

குடும்ப பொறுப்பு, வறுமை மீதான கோபம், தாய்ப் பாசம், அண்ணன் மீதான மரியாதை, குற்றவுணர்வு, அது தரும் விரக்தி என உணர்ச்சிக் குவியலான சங்கர் கதாபாத்திரத்தின் இலக்கணத்தை உணர்ந்து, ஆர்ப்பாட்டமில்லாமல்லாத, யதார்த்தமான நடிப்பைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார் தினேஷ்.

உணர்ச்சிகளின் ஏற்றயிறக்கங்களால் அலைக்கழியும் செல்வம் கதாபாத்திரத்தின் கனத்தை உள்வாங்கி, அதை நேர்த்தியாக தன் நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார் மாறன். ஆங்காங்கே கவுன்ட்டர் காமெடிகளாலும், சேட்டைகளாலும் சிரிப்பைத் தந்தாலும், இறுக்கமான மனநிலையை வெளிப்படுத்தும் தருணங்களில் சின்ன சின்ன உடலசைவுகளால் தன் நடிப்பிற்கு புது முகவரியைக் கொடுத்திருக்கிறார். கொல்கத்தாவில் இவர்களுக்கு உதவும் நபராக வரும் சக்தி (சேகர் நாராயணன்) , பேபியின் இளைய மகளாய் வரும் செல்வி (மெல்லடி டார்கஸ்) போன்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்க்கின்றன.

ரயில் பயணத்தின் நெரிசலுக்கு இடையில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ஃப்ரேம்களாலும், கொல்கத்தா நகரத்தின் அமைதியை ஆர்ப்பாட்டமில்லாத கேமரா நகர்வுகளாலும் ட்ரோன் ஷாட்களாலும் திரைக்குக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன். ‘லைவ் லொகேஷன்’ காட்சிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தொகுப்பாளர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்றாலும், இடைவேளை காட்சித் தொகுப்பையும், இரண்டாம் பாதியின் தொடக்கத்தையும் கூடுதல் கண்டிப்புடன் கையாண்டிருக்கலாம்.

டோனி ப்ரிட்டோ இசையில், பிரதீப் குமார் குரலில் ‘நெடுமரம் தொலைந்ததே’ பாடலும், கே.எஸ்.சித்ரா குரலில் ‘யார் பாடலை’ பாடலும் கதைக்கருவைப் பேசுவதோடு, இதயத்தையும் கணக்க வைக்கின்றன. உணர்ச்சிகரமான தருணங்களில் உயிர்ப்போடும், பேபி சேட்டை காட்டும் இடங்களில் துள்ளலாகவும் தன் பின்னணி இசையை அமைத்துக் கவனிக்க வைக்கிறார். ஆனாலும், இரண்டாம் பாதியில் அந்த வயலினுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருக்கலாம்.

திரைக்கதைக்குத் தொந்தரவு தரும் பாடல்களின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். பேபியின் இந்தச் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் காரணத்தைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் சொல்லாமல் போனதோடு, பேபி கதாபாத்திரத்தை முழுக்க உணர்ச்சிகரமாக மட்டுமே திரைக்கதை அணுகியதும் ஒரு ‘அம்மா சென்ட்டிமென்ட்’ படத்திற்கான சாயலையும் ஒரு பக்கம் கொடுக்கிறது.

2018-ல் விழுப்புரத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ‘குடும்ப பிரச்னைகளைப் பேசும் சீரியலா? இல்லை உறவுச் சிக்கலை உணர்வுரீதியாக அணுகும் படமா?’ என சில இடங்களில் குழப்பமும் தருகிறது இந்த ஜே.பேபி.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *