Sun. Oct 6th, 2024
Spread the love

1999ல் நடக்கும் கதை. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஷபீர், அவரது கர்ப்பிணி மனைவியான மிர்னாவை இயற்கையான பிரசவத்திற்காக மலைப் பிரதேசத்தில் உள்ள இயற்கை முறை குழந்தை பிறப்பு மையம் ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு தரப்படும் சிகிச்சையில் மிர்னாவுக்குத் சந்தேகம் வருகிறது, இருந்தும் இயற்கை பிறப்புக்கான பயிற்சிகளை மிர்னா மேற்கொள்கிறார். அதற்கு உதவி செய்வது போல ஷபீர் நடிப்பது ஒரு கட்டத்தில் மிர்னாவுக்குத் தெரிய வந்துவிடுகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இயற்கை முறையில் குழந்தை பெறுவது பற்றிய ஒரு விஷயத்தை மையமாக வைத்து அதில் கணவன், மனைவிக்கு இடையயான ஒரு பிரச்சனையையும் சேர்த்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன்.

ஒரு சிறிய விஷயத்தை வைத்து கூட மலையாளத் திரையுலகில் ஒரு படத்தின் கதை, திரைக்கதையை உருவாக்குவார்கள். மலையாள நடிகர்களான ஷபீர் கல்லரக்கல், மிர்னா நாயகன், நாயகியாக நடித்திருப்பதால் இது ஒரு மலையாளப் படமோ என்ற சந்தேகம் வரலாம். ஆனால், இது ஒரு நேரடியான தமிழ்ப் படம்தான்.

படத்தில் ஆறு கதாபாத்திரங்கள்தான் இடம் பெற்றுள்ளன. மலைப் பிரதேசத்தில் உள்ள இயற்கை குழந்தை பிறப்பு மையம். அங்கு செல்லும் கணவன் மனைவியான ஷபீர், மிர்னா. அந்த இடத்தில் மருத்துவராக வேலை பார்க்கும் பொற்கொடி, உதவியாளராக வேலை செய்யும் தீப்தி, மையத்தின் காவலராக இருக்கும் இந்திரஜித், மையத்தை ஆரம்பித்த பிஆர் வரலட்சுமி ஆகியோரைச் சுற்றியே படத்தின் மொத்த கதையும் நகர்கிறது.

கார்கில் போரில் பணி புரிந்து சில கொடூரங்களை நேரில் பார்த்ததால் மன ரீதியாக கொஞ்சம் பாதிக்கப்பட்ட ராணுவ அதிகாரியாக ஷபீர் நடித்திருக்கிறார். மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர் போல நடித்து அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம். எப்போது நார்மலாக இருப்பார், எப்போது கோபப்படுவார் என்று சொல்ல முடியாதபடி கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார் ஷபீர்.

நிறைமாத கர்ப்பிணி ஆக மிர்னா. 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்தவர். கர்ப்பிணியாக குழந்தையை சுமப்பது போல, இந்தப் படம் முழுவதையும் தனது யதார்த்தமான நடிப்பால் சுமந்திருக்கிறார். கணவன் தன் மீது சந்தேகப்படுகிறான் என்று தெரிந்து அதனால் கோபமடைவதும், துடிப்பதும் என பரிதாபப்பட வைக்கிறார். படம் கவனிக்கப்பட்டால் இவருக்கு விருது கிடைப்பது நிச்சயம்.

சரியாகப் பேச்சு வராத மையக் காவலர் கதாபாத்திரத்தில் இந்திரஜித். ஷபீரையே மிரட்டி பணிய வைக்கிறார். இந்த காட்சி மட்டும் திரும்ப திரும்ப தொடர்ச்சியாய் வருவது சோதனை.

கதை நடக்கும் மலைப் பிரதேசத்தையும், அந்த மையத்தையும் அழகாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல். விஷால் சந்திரசேகர் பின்னணி இசை படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறது.

அரை மணி நேரத்திற்குள் கூட இந்தப் படத்தின் திரைக்கதையை சுருக்கி குறும்படமாகவும் எடுத்திருக்கலாம். இரண்டு மணி நேரப் படமாக நீட்டி சொல்லியிருக்கிறார்கள். இது பெரும் வேதனையே.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *