Mon. Oct 7th, 2024
Spread the love

சென்னையில் அடுத்தடுத்த இடங்களில் பிணங்கள் காணாமல் போவதும், அதேவேலையில் கை, கால், உடம்பு என தனித்தனியாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுவதும் காவல் நிலையத்தில் குழப்பத்தை உண்டாக்குகிறது. குற்றச் செயலுக்கான கிரைம் ஸ்டோரி எழுதுபவரும், குற்றவாளிகளை உருவங்களை ஸ்கெட்ச் செய்பவருமான சிவா (வைபவ்) விசாரணைக்கு உதவ வருகிறார். அதேசமயம் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். இதனால் வழக்கு தான்யா ஹோப் கைக்கு வருகிறது. இவர் சிவாவுடன் (வைபவ்) இணைந்து வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கும்போது அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருக்கின்றன. இறுதியாக உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் என்ன? என்பதே படத்தின்மீதி கதை.

சிதைந்த சடலத்திற்கு முகம் வரைவது, க்ரைம் ஸ்டோரி எழுதுவது எனச் சுவாரஸ்யமாகவே தொடங்குகிறது திரைக்கதை. ஆனாலும், சில நிமிடங்களிலேயே `யூ-டர்ன்’ போட்டு, காதல் காட்சிகள், காதல் பாடல், பார் ஃபைட் எனச் சோதிக்கத் தொடங்குகிறது படம். சிறிது நேரத்திலேயே மீண்டும் `யூ-டர்ன்’ அடித்து, க்ரைமிற்குள் தலையை நுழைக்கிறது திரைக்கதை. காவல் ஆய்வாளர் தான்யா உட்பட அத்தனை போலீஸ் அங்கே இருந்தாலும், எல்லா விசாரணைகளையும் அவதானிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் கதாநாயகனே களமிறங்கிச் செய்வதில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை.

காவல்துறை விசாரணை, உண்மையான குற்றவாளி, அக்குற்றவாளியின் பின்கதை, பாதிக்கப்பட்டவர்களின் பின்கதை, பின்கதையில் பாடல்கள், பழிவாங்கும் படலம், கதாநாயகனின் சாகசங்கள், கதாநாயகனின் பின்கதை என அடுக்கடுக்கான திரைக்கதை லேயர்கள் எந்த நிதானமும் இல்லாமல் வேகவேகமாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. காவல் நிலையத்தின் நுழைவாயிலில் ’மாதவரம்’ என்பது 'மாதாவரம்' என இருப்பதைக் கூட படம் முழுவதும் யாருமே கவனிக்கவில்லை.

அம்மா – மகள் பாசம், ஆஸ்பத்திரியில் நடக்கும் அக்கிரமங்கள், நெக்ரோபீலியா (Necrophilia) என்ற நோயால் பாதிக்கப்பட்டு சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் கதாபாத்திரங்கள் எனப் பல முக்கியமான விஷயங்களைத் திரைக்கதை கொண்டிருந்தாலும், அவை ‘டிராமாவாக’ சொல்லப்படாமல் வெறும் வாய்ஸ் ஓவர்களாகவும், ‘சித்திரிக்கப்பட்ட காட்சிகள்’ போலவும் காட்டப்பட்டுகிறது படம்.

காதல் மனைவியை இழந்த வேதனை, தனக்கு இருக்கும் உடல்ரீதியான பிரச்னை, சடலத்திற்கு முகம் வரைவது, கொலை வழக்குகளைத் துப்பறிவது போன்ற வேலைகள் தரும் இறுக்கம் என அழுத்தமான கதாபாத்திரத்தை அசால்ட்டாக அணுகி, அக்கதாபாத்திரத்தையே கவிழ்த்துப் போட்டிருக்கிறார் வைபவ். அவர் ஹீரோவாக நடித்திருக்கும் 25ஆவது படம் இது, பாராட்டுகள் வைபவ்.

ஒரு பெரிய வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை ஆய்வாளராக தான்யா ஹோப், அக்கதாபாத்திரத்திற்கான எந்தச் சிரத்தையும் எடுக்காமல், ஒப்பேற்றி இருக்கிறார். அதிரடி முடிவுகள், ஆக்ஷன், பரபரப்பு என எல்லாவற்றிலும் ஒரே முகபாவனை காட்டுவது சற்று சலிப்புதான். தன் மகளுக்காக உருகும் தாயாக நந்திதா ஸ்வேதா கொஞ்சம் மனதில் நிற்கிறார். கிச்சா ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, பத்மன் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

ஒரு க்ரைம் திரில்லர் படத்திற்குத் தேவையான பங்களிப்பை ஓரளவிற்குத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி.கே.ராஜா. இரவு நேரச் சண்டைக்காட்சிகளுக்கு ஒளியால் சற்றே புதுமை புகுத்த முயன்றிருக்கிறார்.

எக்கச்சக்க லேயர்களைக் இருப்பதால் தொகுப்பதில் குழப்பம் அடைந்துள்ளார் படத்தொகுப்பாளர் முனீஸ். கொஞ்சமாவது நிதானத்தைக் கடைப்பிடித்திருந்தால் சரியான வடிவம் கிடைத்திருக்கும். அரோள் கரோலி இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கவில்லை. பின்னணி இசையால் சில பரபர காட்சிகளுக்கு மட்டும் வலுசேர்த்திருக்கிறார்.

லாஜிக் ஓட்டைகள், மேலோட்டமான காட்சிகள், நம்பகத்தன்மையே இல்லாத திருப்பங்கள் என படம் அயற்சியை மட்டுமே பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. குற்றங்களை வாய்ஸ் ஓவர்களில் விளக்கும் செய்தித் தொலைக்காட்சிகளின் ஆவண நிகழ்ச்சியைப் பார்த்த அனுபவத்தைத்தான் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது படம். குறிப்பாக அறிமுக இயக்குனருக்கு திரைமொழியில் அனுபவம் தேவை.

By Nisha

One thought on “ரணம் அறம் தவறேல் : விமர்சனம் 5/10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *