நாகர்கோயில் பகுதியில் அறுகுவலை எனும் ஊரில் நூறு வருடங்களுக்கு மேலாக புறா வளர்ப்பதும், புறா பந்தயம் விடுவதும் வழக்கத்தில் இருக்க, அந்த ஊரில் வாழும் ஹீரோ சையத் மஜீத் புறா வளர்ப்பதிலும், பந்தயத்தில் கலந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார். ஆனால், மகன் படிக்க வேண்டும், புறா வளர்க்க கூடாது என்ற கண்டிப்பில் இருக்கிறார் அவரது அம்மா விஜி சேகர். அம்மா எதிர்ப்பையும் மீறி புறா பந்தயத்தில் கலந்து கொள்ள புறாக்களை தயார்ப்படுத்துகிறார் மஜீத். அந்த சமயத்தில் ஊரின் பிரபல ரவுடியான வினு லாரன்ஸ் மோசடி செய்து புறாவை அதிக நேரம் பறக்க விடுகிறார். இது பந்தயந்துக்கு எதிரான செயல் என தட்டி கேட்டு வினு லாரன்ஸுடன் சண்டை போடுகிறார் சையத். இதனால் இருவருக்கும் இடையே கொலை வெறித் தாக்குதல் நடக்கிறது. அதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை .
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த படத்தின் கதையில், புறா வளர்ப்பு, புறா பந்தயம் அதன் வரலாறு என விவரமாக ஒரு ஆவணமாகவும் பதிவு செய்து அதில் நட்பு , காதல், குடும்பப் பாசம், பகை என விறுவிறுப்பான கமர்ஷியல் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான் கிளாடி. கதைக்களம், வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள், பொருத்தமான நட்சத்திரத் தேர்வு, படமாக்கிய விதம், கிராபிக்ஸ் காட்சிட்கள் என இயக்குனரின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.
எதையும் எதிர் கொள்ளும் துடிப்பான இளைஞர் லிங்கம் கதாபாத்திரத்தில் சைத் மஜீத். புறா மீதும், பந்தயம் மீதும் வெறி கொண்டு திரிகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்காக அம்மா, அப்பாவையே எதிர்த்து சண்டை போடுகிறார். சில கொலை வழக்குகளை வைத்துள்ள ரவுடியான வினு லாரன்ஸை எதிர்த்து நேரடியாக மோதுகிறார். என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற அந்த வேகம் நம் மனதில் துடிப்புடன் நிற்கிறது.
இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் மேக்னா எலன், சரண்யா ரவிச்சந்திரன். மேக்னாவை நாயகன் சையத் காதலிக்க, சையத்தை சரண்யா காதலிக்கிறார். காதலும், கதாநாயகிகளும் வேண்டும் என்பதால் சில காட்சிகளுடன் மட்டுமே இவர்களது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகிகளை விடவும் மற்ற கதாபாத்திரங்களுக்கு இயக்குனர் அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் முழுவதும் இடம் பெற வைத்திருக்கிறார்.
நாயகனின் நெருங்கிய நண்பனாக படத்தின் இயக்குனர் ஜான் கிளாடி நடித்திருக்கிறார். கிளைமாக்சில் இவரது கதாபாத்திரம் கண்கலங்க வைத்துத் விடுகிறது. இளைஞர்களுக்கு ஆதரவாக இருக்கும் பண்ணையார் கதாபாத்திரத்தில் ரமேஷ் ஆறுமுகம். கதாநாயகனின் அம்மாவாக விஜி சேகர். வில்லனாக வினு லாரன்ஸ் இவர்கள் அனுபவ நடிகர்களைப் போல அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
புறா பந்தயம் என்றாலே அந்த புறாக்களுடன் நாமும் பறக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவளார் வசந்தகுமார். நிறைய ஏரியல் ஷாட் காட்சிகள், பரபரப்பான காட்சிகள், கதையோடு வேகமாக பயணிக்கிறது கேமரா. அருண்ராஜ் பின்னணி இசை எமோஷலான காட்சிட் களுக்கு இன்னும் உயிரோட்டத்தைத் தருகிறது. சதீஷ்குமார் படத்தொகுப்பும், சேகர் முருகனின் விஎப்எக்ஸ் நுட்பமும் படத்திற்கு பெரும் பலமாய் அமைந்துள்ளது.
மூச்சு விடாமல் படம் முழுக்க பேசுவதும், வன்முறைக் காட்சிகளும், கெட்ட வார்த்தைகளும் படத்தின் மதிப்பைக் குறைத்து விடுகிறது. குறிப்பாக முதல் பாதி ஆவணப்படம் போல் பயணித்து ஆர்வத்தை குறைக்கிறது. அதே போல் தேவையான அளவில் வன்முறைக் காட்சிகளை காட்டியிருக்கலாம். அவற்றை ஓவராகக் காட்டிட்யிருக்கக் கூடாது. இப்படி சில குறைகள் இருந்தாலும், புதிய களத்தை, புதிய கோணத்தில், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் ஜான் கிளாடிக்கு கோடம்பாக்கத்தில் பெரிய எதிர்காலம் உண்டு. மொத்தத்தில், இந்த ‘பைரி’-யை பார்த்தவர்கள் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.