Mon. Oct 7th, 2024
Spread the love

செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பவர் ஆம்புலன்ஸ் டிரைவர் திலகன் (ஜெயம் ரவி) 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகின்றார். வீட்டில் இருக்கும் அனைவரும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கும்போது, ஜெயம் ரவியின் மகள், “கொலைகார அப்பாவைப் பார்க்க மாட்டேன்” எனக் கூறி வீட்டில் இருந்து வெளியே போகிறார். தனக்கு கிடைத்த பரோலில் தனது குடும்பத்தை பார்ப்பது மட்டும் இல்லாமல், தான் 14 ஆண்டுகள் சிறையில் இருக்க காரணமானவர்களை பழி வாங்கவும் முயற்சி செய்கின்றார். அதே நேரம் கொலைகாரி என்ற பழி சுமந்து சஸ்பெண்ட் செய்யபட்டு மீண்டும் பணியில் சேர்கிறார் காவல்துறை அதிகாரியான நந்தினி (கீர்த்தி சுரேஷ்). அங்கு நடந்த கொலை ஒன்றை விசாரிக்கையில் திலகன் மீது சந்தேகம் வருகிறது, அதனால் பரோல் முடியும் வரை தனது நேரடி கண்காணிப்பில் வைக்கிறார். இருந்தும் திலகன் தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனான ஜெயம் ரவி, நடுத்தர வயது கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகின்றார். அவரது நடிப்பும் வசன உச்சரிப்பும் திலகன் கதாப்பாத்திரத்தை ஆடியன்ஸ் மனதில் அப்படியே பதிய வைக்கின்றது. ஜெயம் ரவி கதாப்பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 10 நிமிடங்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனை நினைவு படுத்தியது. கொலைகார அப்பாவை பார்க்க மாட்டேன் என ஜெயம் ரவியின் மகளான யுவினா பர்வதியின் நடிப்பு ஓ.கே ரகம். ஆனால் மகளை பிரிந்த அப்பாவுக்குள் இருக்கும் ஏக்கத்தை ஜெயம் ரவி சிறப்பாகவே வெளிக்காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரியாக வரும் கீர்த்தி சுரேஷ் ஆக்ரோசமான போலீஸாக நடிக்க முயற்சி செய்தது சில இடங்களில் அது கை கொடுத்ததால் தப்பித்தார். சீரியஸான போலீஸ் அதிகாரி எனக் காட்டுவதற்காகவே கீர்த்தி சுரேஷ் சிரிக்காமல் நடித்துள்ளார்.

ஜெயம் ரவியுடன் ஷேடோ போலீஸாக பயணிக்கும் காவல் அதிகாரியான யோகிபாபு பல இடங்களில் சிரிக்க வைக்கின்றார். ஃப்ளாஷ் பேக்கில் ஜெயம் ரவியின் ஜோடியாக வரும் அனுபமா தனது உடல் மொழியால் கவர்கிறார். அம்மா கதாப்பத்திரத்தில் வரும் துளசி, கொடுக்கப்பட்ட சில காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார். அழகம் பெருமாள், சமுத்திரக்கனி, அஜய் என மொத்தம் மூன்று வில்லன்கள். மூன்று பேரும் மோசமான எண்ணம் கொண்ட வில்லன்கள் என்பது வசனத்தில் இருந்தாலும் அது திரைக்கதைக்கு ஒத்துவரவில்லை. இவர்களை கொல்ல ஜெயம் ரவி முயற்சி எடுப்பதை சிறப்பான திரைக்கதையாக உருவாக்கி படத்தை நகர்த்தி இருக்கலாம். ஆனால், ஷேடோ போலீஸாக வரும் சிரிப்பு போலீஸ் யோகிபாபுவை ஏமாற்ற பலமான திரைக்கதை தேவைப்படவில்லை. ஆக்ரோஷமான போலீஸாக வரும் கீர்த்தி சுரேஷின் போர்ஷன் மட்டுமே திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றது.

ஜி.வி. பிரகாஷின் பாடல்களும் பின்னனி இசையும் ஒத்துப்போகின்றது. செல்வகுமாரின் ஒளிப்பதிவு அருமை. படத்தொகுப்பில் படத்திற்கு கூடுமானவரை பலம் சேர்க்க முயற்சித்துள்ளார் ரூபன். கிடைத்த இடத்தில் எல்லாம் கைவண்ணத்தை காட்டியுள்ளார் ஆர்ட் டைரக்டர் சக்தி வெங்கடராஜ்.

அழுத்தமான வசனங்களாலும், சமீபகாலமாக தமிழ் சினிமா தொடாத கதையை நேர்த்தியாக கையாள முயற்சி செய்துள்ளார் அறிமுக இயக்குநர் அந்தோனி பாக்கியராஜ். வாயால் வடை சுட்டு, கீர்த்தி சுரேஷ் கொலையாளி என சொல்வது ? மனைவியை கொன்ற பழியில் ஆயுள் தண்டனையா? அப்பாவை மகள் வெறுக்கவும், மீண்டும் சேரவும் என்ன காரணம்? இப்படி விடை கிடைக்காத திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் முதல் படத்தில் முத்திரை பதித்திருப்பார் இயக்குநர்.

சென்டிமென்டான காட்சிகள், தரமான வசனங்கள், ஒ.கே.வான இசை, ஒத்துப்போகாத திரைக்கதை என இருந்தாலும் குடும்பத்துடன் சென்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு திருப்தியான படமாக சைரன் இருக்கும். ஜெயம் ரவிக்கு வெற்றிப் படங்களின் இந்த படம் இடம் பெறுமா என்பது ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றாலும், தோல்விப்படமாக இருக்க வாய்ப்பில்லை என உறுதியாகச் சொல்லாம்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *