இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் ’96’. பள்ளிக் கால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இத்திரைப்படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ’96’ திரைப்படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதை நடிகர் விஜய்சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் முத்து, ஆளவந்தான், 3, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.