‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கி சமீபத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்று வெளியிட்ட போஸ்டரில் சுருதி ஹாசனும் லோகேஷ் கனகராஜும் நேருக்கு நேர் பார்த்துகொண்டு நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் சுருதி ஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளாரா..? அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் சுருதி ஹாசன் நடிக்கிறாரா..? போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இதுகுறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.