Sun. Dec 22nd, 2024
Spread the love

1960களில் வள்ளுவன்பேட்டை என்ற ஊரில் வங்கி ஒன்றில் வேலை பார்ப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மீது அதிக பற்றுள்ளவர், ஹிந்தித் திணிப்பு கூடாது என்று அவரது தாத்தா எம்எஸ் பாஸ்கருடன் சேர்ந்து போராடியவர். பெண்ணுரிமை பேசி, தனது விருப்பப்படி வாழ நினைப்பவர். தாத்தா பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லை, விரைவில் இறந்துவிடுவார் என்று டாக்டர் சொல்கிறார். திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனச் சொல்லி வரும் கீர்த்தி, அதனால், திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். அவருடன் பழகும் ரவீந்திர விஜய்யைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். ஒரு கட்டத்தில் ரவீந்திர விஜய் ஆணாதிக்க குணம் கொண்டவர் என்ற உண்மை தெரிய வருகிறது. எனவே, திருமணத்தை நிறுத்த ஹிந்தித் தேர்வு எழுதி வங்கியில் பதவி உயர்வு பெற்று வேறு ஊருக்குச் செல்ல நினைக்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஹிந்தி எதிர்ப்பு என்பது படத்தில் திடீர் திடீரென மட்டுமே வந்து போகிறது. கிளைமாக்சில் மட்டுமே அது குறித்து ஓரிரு வசனங்களை ஆதரவாகவும், எதிராகவும் பேசுகிறார்கள். மற்றபடி கீர்த்திக்கும், ரவீந்திர விஜய்க்கும் இடையிலான கருத்து வேறுபாடு, திருமணத்திலிருந்து தப்பிக்க கீர்த்தி என்னவெல்லாம் செய்கிறார் என்றுதான் படம் நகர்கிறது. தமிழ் சினிமாவில் கதாநாயகியரை முதன்மைப்படுத்திய படங்களில் நடிப்பதற்கு சில சீனியர் நடிகைகளே இருக்கிறார்கள். நயன்தாரா, த்ரிஷா ஆகியோரது சில படங்கள் அப்படி வந்தன. அந்த வரிசையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். கயல் என்ற கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார் கீர்த்தி. பெண்ணுரிமை பேசி, தனக்கு விருப்பமானதை மட்டுமே செய்யும் குணம் கொண்ட கதாபாத்திரம். அறுபது வருடங்களுக்கு முன்பு பெற்றோரை எதிர்த்துப் பேசும் அளவிற்கு, இப்படியெல்லாம் பெண்கள் இருந்தார்களா என்ற கேள்வி எழுகிறது. ரவீந்திர விஜய் பற்றிய உண்மை தெரிந்ததும் திருமணத்தை நிறுத்த என்னென்னவோ செய்கிறார். கீர்த்திக்கு நகைச்சுவை நடிப்பும் வரும் என்பது சில காட்சிகளில் தெரிகிறது. முடிந்தவரையில் படத்தைத் தாங்கியிருக்கிறார்.

படத்தின் கதாநாயகனாக ரவீந்திர விஜய். இஞ்சினியரிங் முடித்தவர். ஊருக்கெல்லாம் மின்சாரம் கொடுக்க வேண்டும் என நினைப்பவர். அவரது அந்த லட்சியத்தை ஒரே ஒரு காட்சியில் சொல்லிவிட்டு, பின்னர் கீர்த்தி சுரேஷ் பின்னால் மட்டுமே அலைய வைத்திருக்கிறார்கள். கதைகளை எழுதும் எழுத்தாளராக இருக்கும் கீர்த்தியை பேசிப் பேசியே காதலிக்க வைக்கிறார். கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம். ஆனாலும், அந்தக் கால தூர்தர்ஷன் நாடக நடிகர் போலத்தான் நமக்குத் தெரிகிறார்.

கீர்த்தியுடன் வங்கியில் வேலை பார்ப்பவராக தேவதர்ஷினி, அடிக்கடி சிரிக்க வைப்பார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே. சீரியசான கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர். கீர்த்தியின் அப்பாவாக ஜெயக்குமார், தமிழை தப்புத் தப்பாகப் பேசும் வங்கி மேனேஜர், சரியாகப் பேசும் வங்கி பியூன் என சில கதாபாத்திரங்களுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் காட்சிக்குக் காட்சி இடைவிடாமல் பின்னணி இசை வாசித்துக் கொண்டே இருக்கிறார். அதிலும் சில காட்சிகளில் அந்தக் கால இசையைக் கொடுக்கிறேன் என டிராமாவுக்கான பின்னணி இசை போல வாசித்திருக்கிறார். யாமினி யக்னமூர்த்தியின் ஒளிப்பதிவு அந்தக் கால 'டோன்' என எதையும் பதிய வைக்காமல் இந்தக் காலப் படம் போல பளிச் என இருக்கிறது.

படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு டிராமா பார்த்த எபெக்ட் தான் இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படத்தை சீரியசான ஒரு படமாக எடுத்திருக்க வேண்டும், அல்லது முழு நகைச்சுவைப் படமாக எடுத்திருக்க வேண்டும். அல்லது டிரைலரில் காட்டியது போல ஹிந்தி அரசியல் சார்ந்த கிண்டல் படமாகவாவது எடுத்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டுக் கொண்டதுதான் இப்படத்திற்கு சிக்கலாகிவிட்டது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *