நாயகன் விஜய் ஆண்டனி வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தென்காசி ஊருக்கு வருகிறார். 35 வயதான இவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள். ஆனால், இவரோ காதலித்து தான் திருமணம் செய்வேன் என்று கூறுகிறார். இந்நிலையில் சென்னையில் பெரிய நடிகையாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் மிருணாளினி ரவி, தாத்தா மறைவுக்கு தென்காசிக்கு வருகிறார். இவரை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விஜய் ஆண்டனி. இவரை திருமணம் செய்ய விஜய் ஆண்டனி ஆசைப்படுகிறார். முதலில் திருமணத்தை மறுக்கும் மிருணாளினி ரவி, ஒரு கட்டத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கிறார். திருமணம் ஆன மறுநாளே விஜய் ஆண்டனியிடம் இருந்து விவாகரத்து கேட்கிறார் மிருணாளினி. விவாகரத்து கேட்க காரணம் என்ன? விஜய் ஆண்டனி விவாகரத்து கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். மனைவியை காதலிக்க இவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக நடிகராக மாறும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார். நாயகி மிருணாளினிக்கு நடிக்க அதிகம் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். விஜய் ஆண்டனியின் காதலுக்கு உதவுபவராக வரும் யோகி பாபு ஒரு சில இடங்களில் மட்டுமே ஸ்கோர் செய்து இருக்கிறார். விடிவி கணேஷ், இளவரசு, ஷா ரா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
வாலிப வயதில் தன் காதலை தொலைத்த ஒருவர், திருமண வயதில் காதலை தேடுவதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன். ஓரளவிற்கு திரைக்கதை ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது என்றே சொல்லலாம். இரண்டாம் பாதி திரைக்கதை கொஞ்சம் மெதுவாக செல்கிறது. அதுபோல் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகளையும் வைத்து இருக்கலாம். பரத் தனசேகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறது. பருக் ஜே பாஷாவின் ஒளிப்பதிவு சிறப்பு. வெளிநாடு, கிராமம், சிட்டி என அழகாக இவரது கேமரா படம் பிடித்து இருக்கிறது.