`பேரன்பும்’, பெருங்கோபமும் கொண்ட காதலனால் ஒரு காதலி படும் துயரங்கள், தொடர்ந்து முடிவுக்கு வருகிறது காதல். முறிந்த காதலைக் காப்பாற்றிக் கொள்ள காதலன் நடத்தும் `போராட்டம்’ தான் இந்த `லவ்வர்’.
பொசஸிவ்னெஸ், தாழ்வு மனப்பான்மை இரண்டும் சேர்ந்த மொத்த உருவமாய் இருக்கும் வேலை தேடும் காதலன் அருண் (மணிகண்டன்). ஐடி வேலை, நண்பர்கள் என வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரும் காதலி (ஶ்ரீ கௌரி பிரியா). தொடர் சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும் நிறைந்த இவர்களின் ஆறு வருடக் காதல் இறுதியில் என்ன ஆனது என்பதே ‘லவ்வர்’ படத்தின் கதை.
முதல் காட்சியிலேயே, ‘எதுக்கு மறைச்சிட்டுப் போனே… எதுக்கு பொய் சொல்லிட்டுப் போனே?’ என்ற ஒற்றை டயலாக்கில் இருவருக்குமான பிரச்னை என்ன என்பதைக் தெளிவாக காட்டிவிடுகிறது என்றாலும் அடுத்தடுத்த தொடர் விளைவுகள் சுவாரசியம் இல்லாமல் நகரும் முதல் பாதி சற்று சோதிக்கிறது.
அதே போல் இரண்டாம் பாதியிலும் திரைக்கதை அடுத்தது நகராமல் ஒரே புள்ளியில் தேங்கி நின்றுவிடுகிறது. ‘ஒரே ஒரு சான்ஸ் கொடு!’ என சிம்பிளாய் மன்னிப்பு கேட்டுவிட்டுச் செய்த தவற்றையேதான் நாயகன் மீண்டும் மீண்டும் செய்கிறான் என்பதைக் காட்ட நினைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அதற்காக ஒரே காட்சியையே மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வும், லூப்பில் மாட்டிக் கொண்ட அயர்ச்சியும் ஏற்படுவதால் கடுப்படிக்கிறது.
அருணின் கதாபாத்திரத்தை இயக்குநர் எங்கும் ஹீரோவாக போற்றிப் புகழ் பாடவில்லை என்றாலும் அவனது குடும்பத்தில் நிலவும் சிக்கல்கள், அதனால் உண்டாகும் தாக்கம், கரியர் பிரச்னைகள் என நாயகனது குழப்பமான மனநிலைக்குக் காரணமான பல விஷயங்கள் படம் முழுவதும் டீட்டெய்லாகச் சொல்லப்படுகிறது. ஆனால், நாயகி ஐ.டி-யில் வேலை பார்க்கிறார் என்பதைத் தாண்டி அவர் குறித்து நமக்கு எதுவுமே சொல்லப்படவில்லை. போகிற போக்கில் நாயகனே ஓரிடத்தில், ‘அவங்க வீட்டுல தெரிஞ்சா என்னாகும் தெரியுமா ப்ரோ?’ எனக் கேட்கும் இடத்தில்தான், ‘ஆமால்ல… நாயகிக்கு ஒரு குடும்பம் இருக்குல்ல?’ என நாமுமே யோசிக்கிறோம். இதனாலேயே அருண் செய்வது தவறாக இருந்தாலும் அவனுடனே பார்வையாளர்கள் அதிகமாகத் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள். அவனுக்காகவே பரிதாபப்படுகிறார்கள். இதனாலேயே அவன் செய்யும் அபத்தமான விஷயங்களுக்கும் திரையரங்கில் விசில் சத்தம் பறக்கிறது. ஆனால், நாயகியின் உளவியல் போராட்டங்களில் குடும்பம் பற்றிச் சின்ன காட்சி கூட இல்லாதது ஒரு முக்கியமான நெருடல்.
அதேபோல இன்றைய தலைமுறையினரின் வாழ்வியலைக் காட்டுகிறேன் எனப் படம் நெடுக குடி, கும்மாளம், ஜாய்ண்ட் பார்ட்டி கலாசாரம் எனப் பொதுமைப்படுத்தும் விதத்தில் காட்சிப்படுத்தியிருப்பது நம்மையும் ஹேங்-ஓவரில் தள்ளி விடுகிறது.
இன்றைய சமூகச் சூழலில் நாம் ‘Toxic Relationship’ என வரையறுக்கும் காதல் எப்படியானது என்பதை மிக அருகில் சென்று படம் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ். ஆறு ஆண்டுகள் முதிர்ச்சி பெற்ற காதலை அதன் யதார்த்தம் மாறாமல் திரைக்குக் கொண்டு வந்தது சுவாரசியம் ஆனால் ஒரே காட்சியையே மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வை மறைக்க சற்று திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம், தவறிவிட்டார்!
வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல், சுயநம்பிக்கை இழந்து காதலியை எப்போதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கும் ஆணாதிக்க காதலனாக, எப்போது வேண்டுமானாலும் விரக்தியிலும் கோபத்திலும் வெடித்துச் சிதறும் அருண் கதாபாத்திரத்தை தனது தேர்ந்த நடிப்பால் உயர்த்தி பிடிக்கிறார் மணிகண்டன்.
அருணின் பிடியிலிருந்து விலக முடியாமல் சிக்கித்தவிக்கும் காதலி திவ்யாவாக ஸ்ரீ கௌரி பிரியா. மனரீதியாக இந்த உறவில் தான் படும் பாட்டை வசனங்கள் எதுவும் இல்லாமல் கண்களிலேயே கடத்தி அசத்துகிறார். ‘மாடர்ன் லவ்’ வெப்சீரிஸில் அறிமுகமானவர், இவர் ‘வெள்ளித்திரையில் தனக்கான முதல் படத்திலேயே இத்தனை முதிர்ச்சியான நடிப்பா!’ என நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். தமிழ் சினிமாவுக்கு நல்வரவு!
அருணின் அம்மாவாக வரும் கீதா கைலாசம், டீம் லீடராக வரும் கண்ணா ரவி, தோழிகளாக வரும் நிகிலா சங்கர் மற்றும் ரினி, அருணின் நண்பராக வரும் அருணாச்சலேஸ்வரன் என அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். ‘டாடா’, ‘முதல் நீ முடிவும் நீ’ ஆகிய படங்களில் கவர்ந்த ஹரிஷும் சிறிய வேடம் என்றாலும் மணிகண்டனுடன் உரையாடும் அந்த ஒரு காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார். அதற்கு வசனங்களும் கைகொடுத்து பலம் சேர்க்கிறது .
குறிப்பாக அவளுக்கு பிரீடம் கொடுக்க நான் யார், அவ பிரீடம் அவளோடது என் பிரீடம் என்னோடது என்று சொல்வது சூப்பர்.
காதலர்களுக்கு இடையிலான நெருக்கம், பிரிவு, கோபம், ஆற்றாமை என அனைத்தையும் சிறப்பாகப் பதிவுசெய்திருக்கிறது ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா. க்ளோசப் ஷாட்கள் மூலம் அவர்களின் காதலுக்கும் உணர்வுகளுக்கும் மிக அருகில் நம்மையும் அழைத்துச் சென்றிருக்கிறார். ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் படத்துக்குப் பெரிய பலம். திரைக்கதைக்கேற்ப பாடல்களும் நெருடல் இல்லாமல் வந்துபோகின்றன. இரண்டாம் பாதியில் வரும் ஏதேனும் ஒரு மான்டேஜ் பாடலை மட்டும் குறைத்திருக்கலாம். மற்றபடி பரத் விக்ரமனின் எடிட்டிங்கும் கச்சிதம்.
ஆறு வருடக் காதலில் சந்தோஷமான பக்கங்களை சில மான்டேஜுகளில் கடந்திருப்பதும் குறைதான். காதலை ரொம்பவும் ரொமான்டிசைஸ் செய்யாமல், அதீதமான காதல் தரும் வலி, அதைக் கடப்பதற்கான வழிமுறைகள் என யோசித்ததெல்லாம் ஓகேதான். அதையே இன்னும்கூட இரு பக்கமும் பேலன்ஸ்டாக நின்று சொல்லியிருந்தால் தமிழ் சினிமாவில் பேசப்படாத பக்கங்களையும் பேசிய முக்கியமான படமாக இது மாறியிருக்கும்.