Tue. Jun 17th, 2025
Tourist FamilyTourist Family
Spread the love

இலங்கையில் ஏற்பட்ட வறுமை பிரச்சனையில் சிக்கி தவித்த சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் 2 மகன்களுடன் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் ஆவணங்கள் இல்லாமல் ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து சிம்ரனின் அண்ணன் யோகி பாபு மூலமாக சென்னையில் இன்ஸ்பெக்டர் பக்ஸ் வீட்டில் கேரளாவை சேர்ந்தவர்கள் எனக்கூறி வாடகைக்கு குடியேறுகிறார்கள். குடியேறிய சில நாட்களிலேயே காலனி பொது மக்களின் குடும்பத்தில் ஒருவராக சசிகுமார் குடும்பம் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு சசிகுமார் குடும்பம் தான் காரணம் என போலீஸ் அதிகாரி சென்னைக்கு வருகிறார். இறுதியில் சசிகுமார் குடும்பத்தின் நிலை என்ன ஆனது? போலீஸ் அதிகாரி சசிகுமார் குடும்பத்தை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சசிகுமார், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு மகிழ்ச்சியான குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று நடுத்தர குடும்பத் தலைவனாக காட்சிகளில் உணர்வோடு மட்டுமின்றி கலகலப்பாக நடித்து அசத்தி இருக்கிறார் சசிகுமார். குறிப்பாக குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைக்கிறது. இலங்கை தமிழ் பேசும் பொறுப்பான குடும்ப தலைவியாக நடித்து, கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார் சிம்ரன். பிரச்சினைகளை தாங்கி பிடித்து நடிப்பில் மிரட்டியிருப்பது மட்டுமின்றி ஆல்தோட்ட பூபதி நானடா என்ற பாடல் இசைக்கு அவரது நடனம் கைதட்டி ரசிக்க வைக்கிறது. படத்துக்கு பெரிய நகைச்சுவையை தருவது இளைய மகனாக நடித்துள்ள கமலேஷ். சுட்டித்தனத்துடன் அவரது நடிப்பு சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது. யோகி பாபு வரும் காட்சிகள் கூடுதல் பலம். மகனாக வரும் மிதுன்ஜெய்சங்கர் பக்கத்து வீட்டுக்காரர்களாக எம்.எஸ்.பாஸ்கர், குமாரவேல், ஸ்ரீஜா ரவி, பக்ஸ், யோகலட்சுமி, ரமேஷ், திலக் ஆகியோர் நடிப்பு பாராட்டுக்குரியது.

இலங்கையில் இருந்து தமிழகம் வருவோர் சந்திக்கும் பிரச்சினைகளை காட்சிகளாக்கி தத்ரூபமாக செதுக்கி காட்டியிருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவனித். முதல் படமாக இருந்தாலும் அனுபவ இயக்குனர் போல் காட்சிகளில் உணர்வு, நகைச்சுவை கலந்து ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படத்தை பொழுதுபோக்காக கொண்டு சென்றுள்ளார். ஒருசில லாஜிக் மீறல்கள், தேவை இல்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனம். அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சான்ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையையும் கதையோடு பயணித்து ரசிக்க வைத்து இருக்கிறது. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *