சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘வெங்காயம்’திரைப்படம் பத்திரிகையாளர்கள், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களால் பெரிதும் பாராட்டு பெற்ற நிலையிலும், வியாபார ரீதியாக தோல்வியடைந்தது. இப்படத்தை இயக்குனரின் ஊரில் உள்ள அவரது நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் நடித்து இருந்தனர். இதனால் இப்படம் உருவான கதையை சுவாரசியமாக மக்களிடம் கூறலாம் என எடுக்கப்பட்ட திரைப்படமே பயாஸ்கோப்.
அதன்படி வெங்காயம் திரைப்படம் உருவாக தூண்டலாக இருந்த கதையில் இருந்து. இப்படத்தை எப்படி அவரிடம் இருக்கும் நண்பர்கள், இடம் , ஊர் மக்களை வைத்து இயக்கிருக்கிறார். பெரிதும் தொழில்நுட்ப உதவிகள் இன்றி இருக்கும் கருவிகளை வைத்து எடுத்தது, திரைப்படம் எடுப்பதற்காக அவரிடம் இருந்த ஆடு , மாடு, நிலம் என அனைத்தையும் விற்று இறுதியில் படத்தை எப்படி விற்றார் அதற்கு எப்படி சேரன் மற்றும் சத்யராஜ் உதவி செய்தனர் என மிகுந்த வலியுடன் கொஞ்சம் நகைச்சுவை கலந்து கூற முயற்சி செய்துள்ளார் என்பதே பயாஸ்கோப் படத்தின் கதை.
இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிறகு அவரின் கிராம மக்கள் மற்றும் நண்பர்கள் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நடிகர்களான சேரன் மற்றும் சத்யராஜ் கவுரவ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அவரது தாத்தா மற்றும் பாட்டி சிறப்பாக மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
வெங்காயம் திரைப்படத்தை உருவாக்க இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பட்ட போராட்டங்கள், கஷ்டங்களை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். தனது முந்தைய பட பாணியிலேயே கிராமத்து மனிதர்களை கதையின் மாந்தர்களாக்கி ஒரு எதார்த்தமான சினிமாவாக உருவாக்கியுள்ளார். நிலத்தை அடகு வைத்து படத்தை இயக்குவதும். சினிமா வெளியானப்பிறகு அது தோல்வியடையும் போது அந்த நிலத்தை அவர் மீட்டு எடுத்திடுவாரா? என்ற உணர்வு பார்வையாளர்களுக்கு கடத்திவிடுகிறார். கதை நல்ல கதையாகவே இருந்தாலும் அதை வியாபாரம் செய்வதற்கும் மக்களிடம் கொண்டுப் போய் சேர்ப்பதற்கும் இங்கே நட்சத்திரங்கள் முகங்கள் தேவைப்படுகின்ற உண்மையை வெளிப்படுத்தி இப்படத்தை இயக்கியுள்ளார். ஆனால் இதனை ஏன் நாம் பார்க்க வேண்டும் என்ற கேள்வியும் பார்வையாளர்களுக்கு வருவது படத்தின் பலவீனம்.
ஒளிப்பதிவாளர் முரளி கணேஷின் கேமரா கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது. இசையமைப்பாளர் தாஜ்நூருக்கு வேலை மிக மிக குறைவு என்றாலும், அதை மிக நிறைவாக செய்திருக்கிறார். இப்படத்தை ப்ரொடியூசர் பசார்.காம் மற்றும் 25 டாட்ஸ் கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.