ஜாக்கி சான் நடிக்கும் படம் என்றாலே அவற்றைப் பார்க்க தமிழ் ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக அவரது பல படங்கள் வெளியாகி இங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த படம், தமிழில் டப்பிங் ஆகி மீண்டும் வெளியாகி உள்ளது. இந்தப் படம் சரித்திர காலத்தையும், இன்றைய காலத்தையும் கலந்து எடுக்கப்பட்ட ஒரு படம். ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்த ‘மகதீரா’ படம் போன்ற ஒரு கதை. அந்தக் கால சீனாவில் காபடபுரா, விஜயபுரி என்ற இரண்டு நாடுகள் உள்ளன. காபடபுரா இளவரசன் ஆரிப் ரகுமானுக்கு மற்ற நாடுகள் மீது படையெடுத்துப் போவது ஆசை. அப்பாவையும், தம்பியையும் கொன்று தனது நாட்டிற்கு அரசன் ஆக அறிவித்துக் கொள்கிறார். அவரது தளபதி மகள் குல்நெசர் பெக்ஸ்டியர் மீது ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். அதற்கு குல்நெசர் மறுப்பதால் அவரது பெற்றோரை கொலை செய்கிறார் அரசன் ஆரிப். ஒரு சந்தர்ப்பத்தில் குல்நெசரை காபடபுரா அரசனிடமிருந்து விஜயபுரி நாட்டின் வீரர்களான ஜாக்கிசான் மற்றும் அவரது நண்பன் லே ஜாங் காப்பாற்றுகிறார்கள். லேவுக்கு குல்நெசர் மீது காதல், ஆனால் குர்நெசருக்கோ ஜாக்கி சான் மீது காதல். இதன்பின் விஜயபுரி மீது போர் தொடுத்து வருகிறார் காபடபுரா அரசர் ஆரிப். இது அந்தக் கால கதையாக படத்தில் இடம் பெறுகிறது.
இந்தக் காலக் கதையில் புதைபொருள் ஆராய்ச்சியாளரான ஜாக்கி சான், அவரது உதவி பேராசியராக லே ஜாங். இவர்களது ஆராய்ச்சியில் ஒரு மரகத டாலர் கிடைக்கிறது. அது கிடைப்பதால்தான் அவர்களுக்கு அந்தக் கால நினைவுகள் வருவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கால புதையல் இருக்கும் இடத்தை அவர்கள் கண்டுபிடிக்க, அதை அடைய நினைக்கும் ஆரிப் ரகுமான் என இந்தக் கால கதை நகர்கிறது. இரண்டு கதைகளும் திரைக்கதையில் மாறி மாறி வருகிறது.
அந்தக் கால கதையில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தில் இளமையான ஜாக்கி சான் தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பழைய படங்களில் இருந்த அப்போதைய ஜாக்கி சானை விட இந்த டீ-ஏஜிங் ஜாக்கி சான் மிக இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார். விஜயபுரி வீரனாக குதிரை மீதேறி வாள் சண்டை இதர சண்டை என வழக்கம் போல ரசிக்க வைக்கிறார். இந்தக் கால ஜாக்கி சான் கொஞ்சம் வயதான ஆராய்ச்சியாளராக இருக்கிறார். அவருக்கு ஒரு சண்டை வைத்தாக வேண்டுமென கிளைமாக்சில் அசத்தலான சண்டையை வைத்திருக்கிறார்கள்.
விஜயபுரி வீரன் ஜாக்கி சானின் நெருங்கிய நண்பனாக லே ஜாங். அவரும் அதிரடியாக சண்டை போடுகிறார். நாயகி குர்நெசல் பெக்ஸ்டியரை காதலித்து ஏங்கிப் போகிறார். இந்தக் காலக் கதையில் உதவி பேராசியராக நடித்திருக்கிறார். அந்தக் கால கதையில் தளபதி மகளாக நடித்திருக்கும் லே ஜாங் பேரழகியாக இருக்கிறார். காபடபுரா அரசனை எதிர்த்து நின்று அற்புதமாக சண்டை போடுகிறார். ஜாக்கியைக் காதலிக்கிறார்.
அந்தக் காலக் கதையிலும், இந்தக் காலக் படத்தின் லொகேஷன்கள் ஒவ்வொன்றும் மிகவும் அழகாக இருக்கிறது. அவற்றை அற்புதமான அழகுடன் பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜிங்கிள் மா. நாதன் வாங் பின்னணி இசை சீன இசைக்கே உரிய அழகுடன் ஒலிக்கிறது. இந்த படம் ஸ்டான்லி டோங் இயக்கத்தில், ஜாக்கி சான், லே ஜாங், குல்நெசர் பெக்ஸ்டியர், ஆரிப் ரகுமான் மற்றும் பலர் நடிப்பில் மான்டரின் மொழியில் ‘ஏ லெஜன்ட்’ என்ற பெயரில் ஜுலை 10, 2024ல் சீனாவில் வெளிவந்து. தற்போது தமிழில் ‘விஜயபுரி வீரன்’ என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ளது.