Thu. Dec 5th, 2024
Spread the love

தமிழ் சினிமாவில் சாதிய வேறுபாடுகளைப் பற்றிய படங்களை எடுப்பதுதான் இப்போதைய டிரெண்ட். அப்படி எடுக்கப்படும் படங்களை விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக பலரும் அப்படியான படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் படமும் ஏறக்குறைய அதே மாதிரியான மற்றுமொரு படம் தான். ஆனால், அப்படி வெளிவந்த படங்களிலிருந்து இந்தப் படம் சற்றே மாறுபட்டிருக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்கிறோம் என ஒரு விழிப்புணர்வை சேர்த்துக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம்.

'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட் அடுத்து இயக்கியிருக்கும் படம் இது. எடுத்துக் கொண்ட கதை சிறப்பானதுதான், ஆனால், அதை அழுத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் திரைக்கதை அமைப்பதில் நிறையவே தடுமாறியிருக்கிறார்.

1980களில் நடக்கும் கதை. மாங்கொல்லை என்ற கிராமத்தில் தன் அப்பாவால் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக மாற்றியவர் ஆசிரியர் சரவணன். அவர் ஓய்வு பெற்ற பின் அதே பள்ளிக்குத் தன் மகன் விமலை பணி மாற்றம் செய்து வரவழைத்து பணியாற்ற வைக்கிறார். தனது மகன் அந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதற்காக அதைச் செய்கிறார். ஆனால், ஊரில் உள்ள அந்தப் பள்ளியை மேல்சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள் இடிக்க வேண்டும் என பல வருடங்களாக முயற்சிக்கிறார்கள். கிராமத்து சாமி செல்லும் பாதை அது எனக் காரணம் சொல்கிறார்கள். அந்தப் பள்ளியை விமல் காப்பாற்றினாரா, மேல்நிலைப் பள்ளியாக மாற்றினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

80களின் இளைஞன் கதாபாத்திரத் தோற்றத்தில் பொருத்தமாகவே இருக்கிறார் விமல். ஆனால், ஆரம்பக் காட்சிகளில் தெரியும் அந்த 'அலட்டல்' நடிப்பு அவருக்கு சுத்தமாக செட் ஆகவில்லை. நாடகத்தனமாக இருக்கிறது. போகப் போகத்தான் அந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் சாயா தேவியைப் பார்த்ததும் காதல் கொள்கிறார் விமல். வழக்கமான டெம்ப்ளேட் காதலாகவே உள்ளது. காதலை வேண்டாமென்று சாயா தேவி சொல்வதற்கான காரணம் சிறப்பு. ஆனாலும், அடுத்த சில காட்சிகளிலேயே காதலிக்கிறேன் என சொல்லிவிடுகிறார். கிராமத்து ஆசிரியை கதாபாத்திரத்தில் பொருத்தமாக தோற்றத்தில் இருக்கிறார்.

வில்லனாக, கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் பார்த்த சரவணனுக்கு இந்தப் படத்தில் சிறப்பான ஒரு கதாபாத்திரம். ஊரில் உள்ள அனைவரும் படிக்க வேண்டும், அப்பா ஆரம்பித்த பள்ளியை மேலும் வளர்க்க வேண்டும் எனத் துடிக்கும் ஆசிரியர் கதாபாத்திரம். படத்தில் தனது கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்துள்ளார். இவரது மனைவியாக ரமாவும் வழக்கம் போலவே இயல்பாக நடித்துள்ளார்.

படத்தின் முக்கிய வில்லனாக படத்தின் தயாரிப்பளார் சிராஜ் நடித்திருக்கிறார். விமலுடன் சிறு வயதிலிருந்தே நண்பனாக இருக்கும் மேல் சாதியைச் சேர்ந்தவர். நான்கு பேரை கூட்டு சேர்த்துக் கொண்டு கிராமத்தில் வலம் வரும் ஒரு திமிர் பிடித்த இளைஞர் கதாபாத்திரம். யதார்த்தமாக நடித்துள்ள இவருக்கு இன்னும் சில கூடுதல் காட்சிகளை வைத்திருக்கலாம்.

80களின் நாட்களை திரும்பப் பார்ப்பது போல உள்ளதற்கு பாராட்டுக்கள். அதற்கு கலை இயக்குனர் பாரதி புத்தா, ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரிஷ் நிறையவே உழைத்திருக்கிறார்கள். சித்துகுமார் பின்னணி இசை குறிப்பிடும்படி இருந்தாலும் சில பாடல்களை ஹிட் செய்திருக்கலாம்.

கல்வியை அழிக்க பக்தி என்பது மிகவும் வலிந்து திணிக்கப்பட்டதாக உள்ளது. அதிலும் அது கிராமத்து தெய்வத்தின் பக்தி என்பது இங்குள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பில்லை.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *