ஒரு கிராமத்தில் இருக்கும் பழைய அரண்மனையில் சில பராமரிப்பு பணிகளை செய்து அதை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் சந்தோஷ் பிரதாப். அதே அரண்மனையில் தனது மனைவி தமன்னா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அரண்மனையின் உரிமையாளரான ஜமீன்தார் டெல்லி கணேஷ், அவரது பேத்தி ராஷி கண்ணா ஆகியோரும் அதே இடத்தில் வசிக்கிறார்கள். ஒரு நாள் வாக்கிங் செல்லும் சந்தோஷ் பிரதாப், தீய சக்தி மூலம் மர்மமான முறையில் இறக்கிறார். மேலும், அவர் உருவத்தில் அரண்மனைக்குள் செல்லும் தீய சக்தி குழந்தைகளை கொலை செய்ய முயற்சி செய்கிறது.
குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்யும் தமன்னாவும் கொல்லப்படுகிறார். இதை அறிந்த தமன்னாவின் அண்ணன் சுந்தர்.சி, இறப்பில் உள்ள மர்மத்தை அறிய அந்த அரண்மனைக்கு வருகிறார்.இறுதியில் தமன்னா, சந்தோஷ் பிரதாப் இறப்பில் உள்ள மர்மம் என்ன? அந்த தீய சக்தி எது? எதற்காக கொலைகள் செய்கிறது? இறப்பில் உள்ள மர்மத்தை சுந்தர்.சி கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக நடித்து இருக்கும் சுந்தர்.சி கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தங்கை மீது பாசம் கொண்ட அண்ணனாகவும், குழந்தைகளை காப்பாற்ற போராடும் மாமனாகவும், உண்மைகளை கண்டறியும் வக்கீலாகவும் நடித்து கவர்ந்து இருக்கிறார். கோவை சரளா, யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் ஆகிய மூவரும் நகைச்சுவை காட்சிகளில் போட்டி போட்டு நடித்துள்ளனர். தன் பிள்ளைகளை காப்பாற்றும் காட்சிகளில் கவனிக்க வைத்துள்ளார் தமன்னா. மற்றொரு நாயகியாக வரும் ராஷி கண்ணா கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். சந்தோஷ் பிரதாப்க்கு பெரியதாக வேலை இல்லை. கடைசி பாடலில் நடனம் ஆடும் குஷ்பு மற்றும் சிம்ரன் ஆகியோர் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.
அரண்மனை பாகங்களில் வந்த அதே பாணியிலான கதைக்களத்துடனும் இந்த பாகத்தில் கூடுதல் விறுவிறுப்புடன் இயக்கியுள்ளார் இயக்குனர் சுந்தர் சி. சண்டை காட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார். இரண்டாம் பாதியில் நகைச்சுவை மற்றும் சண்டை காட்சிகளில் மிரட்டியுள்ளார். ஹிப்ஹாப் ஆதியின் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை படத்தின் கூடுதல் பலமாக அமைந்துள்ளது. படத்தின் இறுதியில் வரும் அம்மன் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது.படத்தின் பெரும்பாலான காட்சிகள் செட்டில் எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை எவ்வளவு தூரம் உண்மையாக காண்பிக்க முடியுமோ கிருஷ்ணசுவாமி அவரது ஒளிப்பதிவில் காட்சி படுத்தியுள்ளார். கிளைமாக்ஸில் வரும் சண்டை மற்றும் கோவில் திருவிழா காட்சிகளை தத்ரூபமாக காட்சி படுத்தியுள்ளார்.