சென்னையில் அடுத்தடுத்து இளம் பெண்களை கொலை செய்து வருகிறார் ஆர்கே சுரேஷ். இவரை போலீசார் ஒரு பக்கம் வலை வீசி தேடி வருகிறது. இதே சென்னையில் கணவர் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ஆனந்தி. ஒரு நாள் கணவர் குழந்தையுடன் வண்டியில் செல்லும் பொழுது, போலீசார் தவறுதலாக ஆனந்தியின் கணவரை சுட்டு விடுகிறார்கள்.
கணவனை இழந்த ஆனந்தி, மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். தன் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கால் கேர்ள் வேலைக்கு செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஆர்.கே.சுரேஷிடம் சிக்கி கொள்கிறார் ஆனந்தி.
இறுதியில் சைக்கோ கொலையாளி ஆர்.கே.சுரேஷிடம் இருந்து ஆனந்தி தப்பித்தாரா? ஆர்.கே.சுரேஷ் பெண்களை கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஆனந்தி முதல் பாதி கதையை தன் தோளில் தாங்கி நடித்து இருக்கிறார். குடும்பத்துடன் இருக்கும் போது ஜாலியாகவும், கணவர் இறந்த பிறகு சோகத்தையும், கொலையாளிடம் சிக்கி கொண்ட பிறகு பரிதாப நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். பேசாமலேயே நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு. போலீசாக வரும் நபர் நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
சைக்கோ திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். முதல் பாதி திரைக்கதை விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதி சற்று மெதுவாகவும் நகர்த்தி இருக்கிறார். பிளாஷ்பேக் காட்சி மனதில் பெரியதாக ஒட்டவில்லை. அடுத்தடுத்து யூகிக்க முடிந்த காட்சிகள் இருப்பது பலவீனம். இளையராஜாவின் ஒளிப்பதிவு சிறப்பு. இருட்டில் கூட இவரது கேமரா அழகாக படம் பிடித்து இருக்கிறது. படத்திற்கு பெரிய பலம் சுதர்ஷனின் இசை. கதைக்கு தேவையான பின்னணி இசையை கொடுத்து கவனிக்க வைத்து இருக்கிறார்.