Thu. Nov 28th, 2024
Spread the love

விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள மகிழ்ச்சியான ரொமாண்டிக்- காமெடி படம் ‘ரோமியோ’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இந்தப் படம் ஏப்ரல் 11, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் பகிர்ந்து கொண்டதாவது, “ஒவ்வொரு இயக்குநருக்கும் விஜய் ஆண்டனி சாருடன் பணிபுரிய வேண்டும் என்று கனவு இருக்கும். ஏனென்றால் அவர் அனைத்து வயதினருக்கும் பிடித்த ஹீரோ. தனித்துவமான ஜானர் மற்றும் புதிய கதைக்களங்களை முயற்சி செய்ய யாராவது விரும்பினால் அவர்தான் டாப் சாய்ஸாக இருப்பார். நான் ‘ரோமியோ’ படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடித்ததும் விஜய் ஆண்டனி சார் அதில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். ஆனால், கதை அவருக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனெனில், ரொமாண்டிக் – காமெடி ஜானரில் இதுவரை அவர் நடித்ததில்லை. ஆனால், அவர் கதையை கேட்டு, ரசித்து உடனடியாக படத்தைத் தயாரித்து நடிக்க ஒப்புக் கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சீனியர் நடிகர்களுடன் பணியாற்றுவது உண்மையில் பெரிய சவாலாக இருந்தது. நான் புதுமுகம் என்பதால் தலைவாசல் விஜய் சார், யோகிபாபு சார், வி.டி.வி.கணேஷ் சார் போன்ற மூத்த நடிகர்கள் எனது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும், படப்பிடிப்பில் அவர்கள் ஆதரவாக இருந்தனர். அவர்கள் தங்களுடைய சிறப்பான நடிப்பால் காட்சிகளை உண்மையாகவே மெருகேற்றினார்கள். மிருணாளினி ரவி இந்த பாத்திரத்திற்கு சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். ‘ரோமியோ’ படம் நகைச்சுவை, ரொமான்ஸ், எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எமோஷன் கலந்த ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்கு படமாக இருக்கும். ‘ரோமியோ’ படத்தைப் பார்த்துவிட்டு பார்வையாளர்கள் சிரிப்புடனும் முழு திருப்தியுடனும் தியேட்டர்களை விட்டு வெளியேறுவார்கள்” என்றார்.

‘ரோமியோ’ படத்தை விநாயக் வைத்தியநாதன் எழுதி இயக்கி இருக்க, விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். முதன்மை கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்திருக்க இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பரத் தனசேகர் இசையமைத்திருக்க, ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *