உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள படம் “தி கோட் லைஃப் ஆடுஜீவிதம்”. பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள இந்த படம் மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது. மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை பிளெஸ்ஸி படமாக இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
இந்த படம் தொடர்பான விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பேசிய பிருத்விராஜ், “இந்தப் படம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகால பயணம். 2008-ல் இயக்குநர் பிளெஸ்ஸி என்னிடம் வந்து, ‘நஜீப்பாக நீங்கள் தான் நடிக்க வேண்டும்’ எனக் கூறினார்.2009 ல் இந்தப் படம் செய்யலாம் என முடிவெடுத்து அதன் பிறகு படப்பிடிப்புக்கு செல்ல பத்து வருடங்கள் ஆனது. 2022 இல் இருந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு ஒன்றரை வருடம் ஆனது. மலையாள சினிமாவுக்கு இப்போது நல்ல நிலைமை. இது போன்ற சமயத்தில் எங்கள் படம் வருவது மகிழ்ச்சி.படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்ய ஒப்புக்கொண்ட உதயநிதி சாருக்கும், ரெட் ஜெயண்ட்டுக்கும் நன்றி. இந்த படம் நஜீப் என்ற மனிதனின் போராட்டத்தையும் அவரது தன்னம்பிக்கையும், அவரை போல இருக்கக்கூடிய பலருக்குமான அர்ப்பணிப்பு,” என்று தெரிவித்தார்.