கடந்த 2013-ல், பிரபல இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான மலையாள படம் ‘திரிஷ்யம்’ . ரசிகர்கள் கொண்டாடிய இப்படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி, ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது.
இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வந்து வரவேற்பை பெற்றது.
திரிஷ்யம்’ படத்தின் 3-ம் பாகத்தினை தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து ரீமேக் செய்து ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், திரிஷ்யம் திரைப்படத்தின் 1ம் மற்றும் 2ம் பாகம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. ஒரு இந்தியத் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
கடந்த ஆண்டு கொரிய மொழியில் இப்படத்தை ரீமேக் செய்வதற்கான உரிமத்தை பனோரமா ஸ்டுடியோஸ் பெற்ற நிலையில், தற்போது கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டிலும் அதனை ரீமேக் செய்ய முன்வந்துள்ளனர்.