அரசியல் ஆதாயத்துக்காக இருவேறு மதத்தினர் அடங்கிய இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையே சண்டை மூட்டி, இரண்டு ஊர் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கின்றனர் அரசியல்வாதிகள். அதற்கேற்றவாறு அந்த இரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் மேட்ச்சில் மோதல் வெடிக்க, அது பெரும் கலவரமாக உருவெடுக்கிறது. இந்த யுத்தம் அந்த கிராமங்களையும், அதிலிருக்கும் மனிதர்களையும் என்னவெல்லாம் செய்தது?, அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் ? என்பதே ‘லால் சலாம்’ படத்தின் கதை.
மூரார்பாத் கிராமம், இஸ்லாமியர்மற்றும் இந்துக்கள் இடையேயான ஒற்றுமை, அதன் பின் மோதல், இரண்டு கிரிக்கெட் டீம்கள், விஷ்ணு விஷாலின் கதை, அவரின் காதல், ரஜினிகாந்த், அவரது மகனாக வரும் விக்ராந்த், அவரின் கிரிக்கெட் கனவு, திருவிழா தேர், அதன் பிரச்னை, என எக்கச்சகமான கிளைக்கதைகள் திரையில் வேகமெடுத்து ஓடி, சிக்கித் திணறுகிறது. நேர்த்தியில்லாத மேக்கிங், துண்டுத்துண்டான திரைக்கதை, டெம்ப்ளேட்டான கிரிக்கெட் காட்சிகள் என கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடியாக மாறியிருக்கிறது. இந்த இடர்பாடுகளால் முதற்பாதி முழுவதுமே படத்திற்குள் ஒன்ற முடியவில்லை.
இரண்டாம் பாதி தொடங்கியும் இந்தப் பிரச்னை நீள்கிறது. ஒருவழியாக திரைக்கதை நிதானம் கொண்டு இறுதியில் மையக்கதையைக் கண்டடைகிறது படம். முதற்பாதியில் பிரதான கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியாமல் போனதால் இரண்டாம் பாதியில் அவர்கள் தொடர்பாக வரும் உணர்வுபூர்வமான காட்சிகளை உள்வாங்கிக்கொள்ள நேரமெடுக்கிறது. இந்தப் பிரச்னையை ஒற்றை ஆளாகச் சமாளித்திருக்கிறார் ரஜினிகாந்த்
மொய்தீன் பாயாக சிறப்புத் தோற்றத்தில் வரும் ரஜினிகாந்த். முதற்பாதியில், ஆக்ஷன், மாஸ் இன்ட்ரோ, சின்னச் சின்ன சேட்டைகள் என அவருக்கான தனி ஸ்டைலில் கலக்குகிறார். ஆனாலும், இக்காட்சிகள் எல்லாம் படத்துக்கு வேகத்தடை ஆகவே இருக்கிறது.
அதே சமயம் இரண்டாம் பாதியைக் காப்பாற்றுவதில் முக்கிய தூணாக இருக்கிறது அவரது நடிப்பு. உணர்வுபூர்வமான காட்சிகளில் தன் முதிர்ச்சியான நடிப்பை வழங்கி, கதைக்கருவிற்கு அர்த்தம் சேர்த்திருக்கிறார்.
காதல், ஆக்ரோஷம், குற்றவுணர்வு எனத் தேவையான நடிப்பைத் தன் பாத்திரமறிந்து வழங்கியிருக்கிறார் நாயகன் விஷ்ணு விஷால். மற்றொரு நாயகனான விக்ராந்திற்கு இன்னும் அழுத்தமான காட்சிகளைக் கொடுத்திருக்கலாம். ஆனாலும், நடிப்பில் குறையேதுமில்லை.
செந்தில் தன் நடிப்பாலும் வசனங்களாலும் நம் மனதில் பதிகிறார். தம்பி ராமையாவும் ஜீவிதாவும் சில நாடகத்தனமான பாவனைகளைத் தவிர்த்திருக்கலாம். நயவஞ்சகம், மிரட்டல் என விவேக் பிரசன்னா கொஞ்சம் மிரட்டவே செய்கிறார். லிவிங்ஸ்டன், நிரோஷா, தங்கதுரை, தன்யா பாலகிருஷ்ணன் போன்றோர் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வந்துபோகிறார்கள்.
விளையாட்டை மையமாக வைத்து கருத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் திரைக்கதை அமைப்பும், படத்தின் நீளமும் லால் சலாமுக்கு தடையாகிவிட்டது.
விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறது. ‘நான்-லீனியர்’ பேர்ட்டனில் நகரும் முதற்பாதியின் குழப்பமான திரைக்கதையை மேலும் குழப்பமாக்கியிருக்கிறது ஆறு மாதம் முன், ஆறு மாதம் பின் என ‘தாவி’க் கொண்டே இருக்கும் பி.பிரவின் பாஸ்கரின் படத்தொகுப்பு.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் காதுகளுக்கு இனிமை சேர்க்கிறது, குறிப்பாக தேவாவின் குரலில் ‘அன்பாலனே’ பாடல் ரசிக்க வைக்கிறது. ‘தேர் திருவிழா’ ஆட்டம்போட வைக்கிறது. ஆனால், பல மேம்போக்கான காட்சிகள் பின்னணி இசைக்கு கைகொடுக்கவில்லை.
சந்தனக்கூடு திருவிழா, கிராமத்துக் கோயில் திருவிழா, தேர், 90களின் கிராமம் என கவனிக்க வைக்கிறார் கலை இயக்குநர் ராமு தங்கராஜ்.
தேர் திருவிழா காட்சிகள், பிரிவினைவாத அரசியலைக் கடந்து ஊர் ஒன்று கூடுவது என இறுதிப் பகுதி உணர்ச்சிகரமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருப்பது சற்று ஆறுதல்.
மொத்ததில் இந்த படம் சமகால இந்திய அரசியலுக்கும், சமூகத்திற்கும் தேவையான ‘பிரிவினைவாத அரசியலுக்கு எதிரான சகோதரத்துவத்தைப்’ பேசியிருக்கிறது படம். ஆனால், அதைத் தெளிவான திரைக்கதையால், சுவாரஸ்யமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருந்தால் இந்த ‘லால் சலாமிற்கு’ ஒரு ‘சலாம்’ போட்டிருக்கலாம் – ஆனால் தவறிவிட்டதே!