இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அறிமுகமானார். அதே படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானவர் ஹரிஹரன். அதற்கு முன்பே சில மியூசிக் ஆல்பம் மூலமாக ஓரளவு பிரபலமாக இருந்த இவர், ரோஜா படம் வெளியான பின்னர் மேலும் பிரபலம் ஆனார். தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தி, மராத்தி, ஒடியா உட்பட 10 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். பெரும்பாலும் பல வீடியோ ஆல்பங்களிலும் இவர் பாடி நடித்துள்ளார்.
கடந்த 2005ல் இயக்குனர் ஜெயதேவி இயக்கத்தில் வெளியான பவர் ஆப் உமன் என்கிற படத்தில் குஷ்புவுடன் இணைந்து கதாநாயகனாகவும் நடித்திருந்தார் ஹரிஹரன். இந்த நிலையில் மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மலையாளத்திலும் இதேப்போல தயா பாரதி என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் ஹரிஹரன். இந்த படத்தை கேஜி விஜயகுமார் என்பவர் இயக்குகிறார். மேலும் தேசிய விருது பெற்ற நாட்டுப்புறப்பாடகி நஞ்சியம்மா, அப்பாணி சரத், நேஹா சக்சேனா, வலிமை புகழ் தினேஷ் பிரபாகர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஆதிவாசிகளின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி அருவி மற்றும் அட்டப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.